மறைந்த ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம்பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து, புகழ் எய்தி, அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம் ஜி ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டு – எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு – அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கி வந்ததோடு, தமிழக முதலமைச்சராகவும் விளங்கிய ஜெயலலிதா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடுதிரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைக்கு மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.
குறைந்த வயதிலேயே அவர் மறைந்திவிட்டார் எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் இலட்சக் கணக்கான தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.