முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலைமை குறித்து சென்னை அப்பலோ மருத்துவமனை நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை உண்மையிலேயே அதிர்ச்சி தந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 78 நாட்கள் கடந்து விட்ட போதிலும், இவ்வாறானதொரு அறிக்கையை அப்பலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்டது கிடையாது.
முதலமைச்சர் உடல் நிலை தேறி வருவதாகவே அவ்வப்போது அப்பலோ அறிக்கையை வெளியிட்டு வந்தது.
சில தினங்களுக்கு முன்னர் அப்பலோ வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை தேறி விட்டதாகவும் எவ்வேளையிலும் அவர் வீடு திரும்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
லண்டன் மருத்துவர்கள், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் வழங்கிய சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி விட்டதாகவே அப்பலோவிலிருந்து முன்னர் அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன.
அ.தி.மு.க தொண்டர்களும் ஜெயலலிதா மரணப் பிடியிலிருந்து மீண்டு விட்டதாகவே மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர். ஆனால் அப்பலோ வெளியிட்ட நேற்றைய அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பலோ நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் மாலை திடீர் மாரடைப்பொன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறிய இருதய சத்திரசிகிச்சையொன்று (ஆஞ்சியோ) அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பலோ அறிக்கை கூறியது.
இச்சத்திரசிகிச்சையின் பின்னர் ஜெயலலிதா மீண்டும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவே வைத்தியசாலை வட்டாரங்கள் மாத்திரமன்றி அ.தி.மு.க. முக்கியஸ்தர்களும் நேற்றுத் தெரிவித்தனர்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக கடந்த ஒக்டோபர் 28ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 78 தினங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
ஜெயலலிதாவின் நேற்றைய உடல்நலை அறிக்கையானது அவரது அபிமானிகளை பெரும் அதிர்ச்சியிலும கவலையிலும் ஆழ்த்தியிருந்தது. ‘கேமோ’ கருவி மூலம் அவர் சிகிச்சை பெற்று வருவதாக நேற்றைய அறிக்கை கூறியது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இருதய சத்திரசிகிச்சையின் எதிர்விளைவைப் பொறுத்தே ஜெயலலிதாவுக்கு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படுமென்று அப்பலோ வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
இதேவேளை டில்லியிலிருந்தும லண்டனிலிருந்தும் விசேட வைத்திய நிபுணர்களை வரவழைக்க ஏற்பாடுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
ஜெயலலிதாவின் உடல்நலையை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்களும் அபிமானிகளும் நேற்று அப்பலோ மருத்துவமனைக்கு திரண்டு வந்தபடியிருந்தனர்.நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தீவிர பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது சினிமா வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் பெரும் தடைக் கற்களைத் தாண்டி வந்த ஒரு சாதனையாளர். அவரது கடந்தகாலம் மிகவும் போராட்டம் நிறைந்தது.
இவ்வேளையில் ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்து இவ்விடத்தில் ஆராய்வது மிகப் பொருத்தமாகும்.
ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்காத சிக்கல்களும், கஷ்டங்களும் இல்லை. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் ஐந்தாவது முறையாக அமர்ந்தார்.
அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அது அவரது கையில் இல்லை. அவரது வாழ்க்கையை இதுவரை மூன்று கால கட்டங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என மூன்று பேர் அவரது வாழ்க்கை முழுக்க ஆளுமை செய்திருக்கின்றனர்.
ஜெயராமன், சந்தியா தம்பதிக்கு மகளாகப் பிறந்த ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அம்மா அவரை ‘அம்மு’ என்றுதான் செல்லமாக அழைத்து வந்தார். தாய் சந்தியா அம்முவை கவனமாக வளர்த்து வந்தார். அவருடைய அனுமதி இல்லாமல் அம்மு எதையும் செய்ய முடியாது. அம்மு தனக்கு என்று தனியே எந்த முடிவையும் எடுக்க முடியாது. முழுக்க முழுக்க தாய் சந்தியாதான் அம்முவின் வாழ்க்கையில் இருந்தார்.
படப்பிடிப்புக்கு சந்தியா செல்லும் போதும், அவர் அருகில் இல்லாவிட்டாலும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் அம்மு வளர்ந்தார். சட்டம் படிக்க விரும்பிய அம்மு, நடிக்க வந்ததும் தாய் சந்தியாவின் நிர்ப்பந்தத்தினால்தான். குடும்ப சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணம். எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் என அனைத்தையும் தாய் சந்தியாதான் கவனித்து வந்தார்.சந்தியா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.
ஜெயலலிதாவின் துணிச்சலும், அவரது திறமையும் எந்தக் காரியத்தையும் முடித்துக் காட்டும் தன்மையும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்திருந்தது. சொல்லப் போனால் ஜெயலலிதா எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது, எங்கு போக வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீது மிகவும் செல்வாக்குக் கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகள் காரணமாக நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தெல்லாம் கூட ஜெயலலிதா நீக்கப்பட்டார். அதையும் மீறி எம்.ஜி.ஆரின் தவிர்க்க முடியாத அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க-வை ஒன்றிணைத்து வெற்றியின் பாதையை நோக்கித் தனி ஆளாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரத்த உறவுகள் இருந்தாலும் கூட அவர்கள் யாரையும் பெரிதாக தனக்கு அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை.
வீடியோ லைப்ரரி வைத்திருந்த சசிகலா, வீடியோ நாடாக்கள் கொடுக்க வந்த போது ஜெயலலிதாவுடன் பழகினார். நாளடைவில் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளில் சசிகலாவும் ஆளுமை செய்தார்.சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு எவ்வளவோ சிக்கல்களும், துன்பங்களும் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனது உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவே குறிப்பிடும் அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு உயர்ந்தது. ஜெயலலிதா நம்பும் ஒரே நெருங்கிய நபராக சசிகலா மட்டுமே கடைசி வரை இருக்கிறார்.
சந்தியா, எம்.ஜி.ஆர், சசிகலா மூவரும்தான் தனது நலம் விரும்பிகள் என்று பரிபூரணமாக நம்பினார். அது உண்மையும்கூட. ஜெயலலிதாவின் சுக துக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள மூவர்தான் அவர் அருகில் இருந்தனர்.
சிறு வயதில் தன் மீது செலுத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்றத் தெரியாமல், தனியே அறைக்குள் சென்று அழுத அம்முவில் இருந்து, இன்று அப்போலோவில் யாரையும் தன் அருகே அனுமதிக்காத அம்மா வரையான ஜெயலலிதா இறுக்கமான ஒரு நபராகவும், யாரும் நெருங்க முடியாத ஒரு நபராகவும் இருப்பதற்கு இவர்கள் மூவரும் கூட ஒரு காரணம்.
இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்.” -இது நடிகையாக புகழ் பெற்ற பின் ஜெயலலிதா சொன்னது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அவர் அப்படியான மனநிலையில்தான் இருந்திருக்கிறார்.
நடிக்க விருப்பமில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அதை அம்மு விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. படிப்பில், நாட்டியத்தில் எப்படித் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, உச்சங்களைத் தொட்டாரோ அது போலத்தான் நடிப்பையும் கையாண்டார்.
விடுமுறை நாட்களில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடியவில்லையே என்ற எந்த ஆயாசமும் அவருக்கு இல்லை. தன் ஆன்மாவிலிருந்து சிறந்ததை எடுத்து வழங்கினார். அதனால்தான் என்னவோ… அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.
ஆம், ‘எபிசில்’ ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு அடுத்த வாய்ப்பு வந்தது. வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. அது, வரும் போது இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், அவருக்காக வாய்ப்புக் காத்திருந்தது. நாட்கள் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில்.அமெரிக்க நகைச்சுவை நடிகர் மில்டன், “வாய்ப்புகள் கதவைத் தட்டவில்லை என்றால், கதவுகளை நீங்களே உருவாக்குங்கள்…” என்றார்.
அம்முவுக்கு ஏறத்தாழ ஒன்பது மாத காலம், வாய்ப்பு கதவைத் தட்டி விட்டு, அவர் திறப்பார் என்று வாசலிலேயே காத்துக் கிடந்தது.
சந்தியா அப்போது, ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதில், அவருக்கு மாமியார் வேடம். படத்தின் நாயகி, ஒரு பால்ய விதவை. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நபர் கிடைக்கவில்லை.படத்தின் இயக்குநர் ராகவய்யா இதற்காக ஒரு நெடிய தேடுதல் வேட்டையையே நடத்தி விட்டார். ஆனால், பொருத்தமான நபர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, அந்தக் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட்டு வைத்து விட்டு, மற்ற காட்சிகளை எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
அந்தச் சமயத்தில்தான் மீண்டும் காலம், தன் விளையாட்டைத் தொடங்கியது.ஆம், ஒருநாள் வேறொரு வேலையாக சந்தியாவின் வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள், அம்முவைப் பார்க்கிறார்கள். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்குக் கடத்த அலை, பறவைகள் எல்லாம் சில நொடிகளுக்கு உறைந்து நிற்குமே…. அதுபோல நின்றதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தத் தயாரிப்பாளர்கள்இருவரும் திகைத்துத்தான் போய் விட்டார்கள்.
அதில், ஒருவர் வாய்விட்டே கூறி விட்டார். “நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே… உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாகப் போடப் போகிறோம்” என்றார், ஒரு வாய்ப்பை வழங்கிய மனநிலையில். ஆனால், அதற்கு சந்தியா சம்மதிக்கவில்லை.“முடியாது. அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கும் கூடத்தான்… அவள் படிக்க விரும்புகிறாள். தயவு செய்து வேறொரு நபரை தேடிக் கொள்ளுங்கள்” என்றார் மென்மையான மொழியில்.
வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரை மனதுடன் கிளம்புகிறார்கள்.ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன. முக்கிய கதாபாத்திரம் இல்லாததால், நத்தை வேகத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.அந்தச் சமயத்தில் மீண்டும் அந்தத் தயாரிப்பாளர்கள் சந்தியாவைச் சந்தித்து, “இன்னும் எங்கள் படத்துக்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவு செய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்கிறார்கள்.
மீண்டும்… மீண்டும் கேட்கிறார்கள். இவர்களை உதாசீனப்படுத்தவும் முடியாது. அதே சமயத்தில், அம்முவை நடிக்க அனுப்பவும் முடியாது. சரி… இன்னும் கொஞ்சம் காலத்தைக் கடத்திப் பார்ப்போம்.ஒருவேளை,அதற்குள் இவர்கள் வேறொரு நாயகியைக் கண்டடையலாம் என்று சமயோசிதமாக யோசித்து இப்படியாகச் சொல்கிறார். “அம்முவின் படிப்புக் கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும்வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்கிறார்.
முடியாது என்று சொல்லிவிட்டால் சந்தோஷம்… காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் பிழை இல்லை. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. இதுதான் அப்போதைக்கு சந்தியாவின் எண்ணம்.“சரி காத்திருக்கிறோம்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வாய்ப்பு மூன்று மாத காலம், காதலிக்கு காத்திருக்கும் காதலன் போல, அம்முவின் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறது.
கோடை விடுமுறை வருகிறது. அந்தத் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள். ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி… உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்கிறார்கள். சந்தியாவுக்கு பலமான யோசனை.நிலைமை கையை மீறிப் போய்விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. அம்முவை நடிக்க அனுமதித்து விட வேண்டியதுதானா… என்ற எண்ணம் எழுகிறது.
சரி, அம்முவிடமே கேட்டு விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்.அம்முவிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். “என்ன சொல்கிறாய் அம்மு…? எனக்கும் விருப்பம் இல்லைதான். தொடர்ந்து கேட்கிறார்கள், புறந்தள்ள முடியவில்லை… என்ன செய்யலாம்” என்று கேட்கிறார். அம்மு இதற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார் என்பதுதான் சந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால், அன்று அம்மு என்ன மனநிலையில் இருந்தார் என்று தெரியவில்லை, “நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை’’ என்கிறார்.
வாசலில் ஒன்பது மாத காலமாகக் காத்திருந்த வாய்ப்பு, அம்முவை உற்சாகமாகத் தழுவிக் கொள்கிறது.இவ்வாறுதான் அவரது சினிமா பிரவேசம் அமைந்தது.
ஜெயலலிதா குறித்து எல்லோரும் வியக்கும் விஷயம் அவரின் மொழி ஆளுமை. தமிழ் தவிர்த்து, அவரால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச முடியும்.
2007-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மிக சரளமாக இந்தி பேசிய போது, அந்த மேடையில் இருந்த முலாயம் சிங்கே வியந்துதான் போனார்.
அதுபோல ஒரு முறை, ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார். பெரும் எண்ணிக்கையில் கூடி இருந்த பாமர மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதை உணர்ந்த அவர், சட்டென்று தெலுங்கில் உரையாற்றத் துவங்கி விட்டார்.
சிறுவயதில் மெட்ரிக் பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் சுலபமாக வந்தது. இன்னும் சொல்லப் போனால் சேர்ச் பார்க் பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் பேசத்தான் தடுமாறினாரே தவிர, ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.
பிறகு கன்னடம்… தான் பால்ய வயதை மைசூர் மற்றும் பெங்களூரில் கழித்ததால் அவருக்கு அந்த மொழியும் இயல்பாக வந்தது.
தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளை எல்லாம், அவர் திரை உலகுக்கு வந்த பிறகு தனது தேவையின் கருதி கற்றவை. அதே நேரத்தில் மற்ற மொழிகள் மீதிருந்த விருப்பத்தினாலும் கூட!தாம் மொழிகள் கற்ற பின்னணியை அவரே முன்பொருமுறை அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
அவரது வார்த்தைகளிலிருந்தே – “தமிழ் எனது தாய் மொழி. மைசூரில் சிறு வயதில் சில காலங்கள் வரை இருந்ததால் அங்கு வீட்டில் வேலையாட்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளுடனும் பேசிப் பேசி கன்னடத்தைக் கற்றுக் கொண்டேன்.
அதே நேரம் அவர் தெலுங்கு கற்ற கதை மிக சுவாரஸ்யமானது. அதையும் அவரே சொல்கிறார்.“ நான் ‘மனசுலலு மமதலு’ என்ற தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தமானேன். அப்போது தயாரிப்பாளர்களிடம், ‘எனக்குத் தெலுங்கு தெரியாதே!’ என்றேன். அவர்கள் உடனடியாக தெலுங்கு ஆசிரியரை எனக்கு மொழி கற்பிக்க பணியமர்த்தி விட்டார்கள்.
தினமும் காலை சரியாக ஆறு மணிக்கு அந்த தெலுங்கு ஆசிரியர் வருவார்.நான் அந்த சமயத்தில் தான், நல்ல தூக்கத்தில் இருப்பேன். என்னை வீட்டில் எழுப்புவார்கள். தூக்கக் கலக்கத்தில்தான் வகுப்புக்குச் செல்வேன்.
அது மட்டுமல்லாமல், அப்போதெல்லாம் நான் மிகவும் சங்கோஜி. யாராவது நாலு வார்த்தை பேசினால், நான் ஒரு வார்த்தை தான் பதில் பேசுவேன்.தெலுங்கு பண்டிட் ஏதாவது எனக்கு கோபம் வரும்படி சொல்லிச் சீண்டி விடுவார். நானும் அதற்குப் பலமாக பதில் அளிப்பேன். தெலுங்கில் அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி, மேலும் சீண்டுவார்.
நான் கத்த, அவர் கத்த, பெரிய ரகளையாகி விடும். நான் இப்படிக் கத்தி கத்திக் கற்றுக் கொண்டதுதான் தெலுங்கு.இதனால் இரண்டு மாதத்தில் கற்க வேண்டிய தெலுங்கை சுமார் நாற்பது நாட்களிலேயே கற்றுக் கொண்டேன்” என்று தான் தெலுங்கு கற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
பிற்காலத்தில் வேண்டுமானால் ஜெயலலிதா தன்னை மிகவும் இறுக்கமானவராக காட்டிக் கொள்ளலாம்.இயல்பான தன் விருப்பங்களை தனக்குள்ளேயே வைத்து பூட்டிக் கொள்ளலாம். ஆனால், தன் பதின்ம வயதில், அந்த வயதுக்கே உரிய அபிலாஷைகளுடன்தான் ஜெயலலிதா இருந்தார்.
ஜெயலலிதாவுக்கு தன் சிறு வயதிலேயே தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பம் இருந்திருக்கிறது.சிறு வயதில் சந்தியாவுக்கு தெரியாமல், அவரின் மேக்கப் பெட்டியைத் திறந்து தன்னை அலங்கரித்து இருக்கிறார். இதற்காக, சந்தியாவிடம் அடியும் வாங்கி இருக்கிறார்.
ஜெயலலிதாவே ஒரு முறை தன் அழகு குறிப்பை பகிர்ந்திருக்கிறார். அந்த அழகுக் குறிப்புக்கு அவர் ‘கிளியோபாத்ரா ஸ்டைல்’ என்று பெயரும் வைத்தார்.அது மட்டுமல்ல… அவர் அப்போது இன்னொரு அழகுக் குறிப்பையும் பகிர்ந்திருக்கிறார். அது மிகவும் எளிமையான அழகுக் குறிப்பு தான்.ஆண், பெண் என எந்த பேதங்களும் இல்லாமல் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட… அந்த அழகுக் குறிப்பு இதுதான், “மனதை அழுக்கில்லாமல், குழப்பமில்லாமல்… தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் முகம் மிளிரும்.
அவருக்குள்ளும் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருந்திருக்கின்றன!ஜெயலலிதா ஆரம்பகாலங்களில் தனது கலை மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் அச்சு ஊடகத்தினருடன் மனம் திறந்த நட்பு பாராட்டியவராகவே இருந்திருக்கிறார்.
எப்போதிருந்து அவர் பத்திரிகையாளர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினார் எனில், அது சட்டசபையில் நடந்த புடவை இழுப்பு சம்பவங்களின் பின்னானதாகவோ, வளர்ப்பு மகன் திருமண விவகாரங்களின் பின்னதாகவோ இருக்கலாம் என்றே அனுமானமாகிறது. அதுவரையிலான ஜெயலலிதா ஒரு மனம் திறந்த பேச்சாளராகவே இருந்திருக்கிறார்.
ஒரு முறை கைத்தறிப் புடவைகளை உடுத்தும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் பிரபலங்களை வைத்து புடவை விற்பனை செய்யும் வகையில் சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு தயார் செய்து விட்டு, புடவை விற்கும் பிரபலமாக அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியின் புதுக் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள்.
தன்னை அணுகிய நிருபரின் வேண்டுகோளுக்கு முதலில் சற்றுத் தயக்கம் காட்டி விசயத்தை முழுவதுமாக கேட்டறிந்த ஜெயலலிதா பின்பு அதன் பின்னிருக்கும் நல்ல நோக்கம் அறிந்ததும் தயங்காமல் நிருபர் குழாமுடன் வந்து புடவை விற்றுக் காட்டியிருக்கிறார்.சும்மா அல்ல ஒவ்வொரு கைத்தறிப் புடவை பற்றியும் மிகத் துல்லியமாக விவரம் அறிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புடவைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறி புடவை விற்றுக் காட்டியிருக்கிறார்.
அப்போதெல்லாம் ஜெயலலிதா வெளிப்படைத் தன்மை நிறைந்த நபராகவுமே இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.இது மட்டுமல்ல தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடனான தனது ‘லிவிங் டுகெதர்’ உறவாகட்டும், குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்திய சுயசரிதையாகட்டும் அனைத்திலுமே ஒரு வெளிப்படைத் தன்மை மட்டுமல்ல,பத்திரிகையாளர்களுடனான அவரது நட்பு கலந்த உறவும் வெளிப்படும் வண்ணமாகத் தான் இருந்திருக்கிறது
அவரது ஆரம்ப கால வாழ்க்கை.இவையெல்லாம் தாண்டி தான் நினைத்தே பார்த்திராத வகையில் தனது வாழ்வைத் தீர்மானித்த இரண்டு மிகப்பெரும் சக்திகளாக ஜெயலலிதா குறிப்பிட்டது இருவரை தான். முதலாமவர் அவரது தாய் வேதவள்ளி என்கிற சந்தியா. இரண்டாமவர் எம்.ஜி.ஆர்.