மாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்றிரவு 11.30 மணியளவில் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் இன்று அதிகாலை 2.38 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் வரை பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இன்று காலை 6.15 மணியளவில், போயஸ்கார்டனில் இருந்து இராஜாஜி மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் இருந்தே அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டுள்ளனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.30 மணியளவில், சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஜெயலலிதா மறைவையொட்டி 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை 1 மணியவில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆளுனர் மாளிகையில், நடந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜெயலலிதாவின் மறைவினால் தமிழ்நாடு, கவலையில் ஆழ்ந்துள்ளது.