தமது பராமரிப்பில் இருந்த 16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து கடுமையான காயம் விளைவித்ததற்காக 30 வயது பணிப்பெண்ணை சிங்கப்பூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
புவாங்காக் லிங்கின் புளோக் 992Bல் உள்ள வீட்டில் கடந்த 14ம் திகதி இந்த சம்பவம் நடந்தது. மறுநாள் அந்தப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவான 46 வினாடிகளுக்கான காணொளியை, குழந்தையின் தாயான ஏமி லோ ஃபேஸ்புக்கில் நேற்று முன்தினம் (21) பதிவேற்றியதையடுத்து இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகின.
குழந்தையின் இடது கையை அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சூடான பானை ஒன்றுக்குள் பல முறை வைத்து எடுப்பது காணொளியில் பதிவாகியிருந்தது. குழந்தை அழுவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.
அந்தக் காணொளிப் பதிவைப் பார்த்தபோது எனது அங்கம் முழுவதும் அதிர்ந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் கணக்காளராக பணிபுரியும் தாயார்.
“அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒவ்வோர் இரவும் என் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தை அச்சப்படுகிறதா அல்லது இன்னும் வலி இருக்கிறதா என்பது தெரியவில்லை” என்றார்.
சம்பந்தப்பட்ட பணிப்பெண் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த மாதம் 7ஆம் திகதிதான் அவர் பணியில் சேர்ந்தார்.
சூடான பொருள் இருந்த சட்டியை குழந்தை தவறுதலாக தொட்டுவிட்டது என்று முதலில் கூறிய பணிப்பெண், இவ்வாறு செய்தால் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடியும் என்று எண்ணி இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை, குழந்தையின் தாயார் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வேண்டுமென்றே அபாயகரமான வழிகளில் காயம் விளைவித்ததாக வகைப்படுத்தி இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.