அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
ஒருநாட்டின் தலைவர் எப்படி மக்கள் சேவை புரியவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
அதிகாரம்மிக்க முதல்வர் பதவிவகித்த போதும், தமிழ்நாட்டின் முதல்ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்புகொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.
இலங்கைத்தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழ் மக்களுக்காக அனைத்துலகத்திடம் நீதிகோரி கட்சி வேறுபாடுகளின்றி நிறைவேற்றப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானத்தில் உரையாற்றிய போது, சிங்களஅரசு ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், இனஅழிப்புக்கு எதிராகவே ஈழத்தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது என்றும், உலகநாடுகளின் கவனத்திற்கு வெளிப்படையாகச் சொன்ன ஒரேயொரு தலைவர் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா மட்டும்தான்.
இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழத்தின் பூர்வகுடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாதம் அவர்களை நசுக்கி அழிக்க முனைகிறது என்பதையும், நடைபெற்ற படுகொலைகள் தமிழின அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்.
தமிழர்களுக்காக ஓங்கிஒலித்த அந்தக் குரல்அடங்கி விட்டது. அவர் மறைந்து விட்டார். என்பது தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது.
ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும், தாய்த்தமிழகம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களும் நன்றி உணர்வோடு தாய்த்தமிழகத்தின் மாபெரும் தலைவர், இரும்புப்பெண்மணி அம்மையார் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்திருக்கும்.