வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேசமக்களால் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 3வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரால் குறித்த விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதி மன்றில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த போராட்டம் மக்களினது அன்றாட கடமைகளிற்கும்,பாதுகாப்பிற்கும் தடையாக இருப்பதாக நீதிமன்றிற்கு தெரிவதனால் அதில் பங்கு பற்றியுள்ளவர்களை அந்த இடத்தை விட்டு செல்ல அறிவுறுத்தல் வழங்குமாறு பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
குறித்த உத்தரவை பொலிஸ் பொறுப்பதிகாரி போராட்டக்கார்களிற்கு காண்பித்து விடயம் தொடர்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
குறித்த போராட்டம் காரணமாக குப்பைகளை கொட்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாத வகையில் ஆர்பாட்டம் இடம்பெறதால் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபை கழிவகற்றும் வாகனங்கள் நேற்றய தினமும் நகரில் குப்பைகளை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.