சீனாவில் உருவாகிப் பரவி வரும் புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். வுஹான் மாகாணத்திலிருந்து பரவி வரும் இந்த வைரஸினால் சீனாவின் 13 நகரங்களில் சுமார் 41 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸினால் இன்னும் நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்தாலும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதால் ஆங்காங்கே கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை என்னவென்று தெரியாத இந்த கொரோனா வைரஸினால் நிமோனியா ஏற்பட்டு நுரையீரல் பாதிப்படைந்து பலர் மரணமடைந்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றி பரவுவதாகும். இதன் நோய் அறிகுறிகளாக சாதாரண தடிமல் முதல் தீவிர மூச்சுக்குழல் சிக்கல்கள், உடனடி நுரையீரல் பாதிப்பினால் மூச்சுத் திணறல் ஆகியவை மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய ககொரோனா வைரஸ் இதற்கு முன்னர் மனிதர்களைத் தொற்றியதாக மருத்துவ வரலாறு இல்லை.
டிசம்பர் 31, 2019 இல் சீனா கண்ட்ரியில் உள்ள உலகச் சுகாதார மையத்தின் அலுவலகத்தில் வுஹான் மாகாணத்தில் ஒரு சிலருக்கு நிமோனியா ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது காரணம் அறிய முடியாத நிமோனியா நோய் ஏற்பட்டுள்ளது. சீன மருத்துவ விஞ்ஞானிகள் நாவல் கொரோனா வைரஸை ஜனவரி 7ம் திகதி கண்டுபிடித்தனர். அதாவது வுஹான் நகரின் சந்தை ஒன்றில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியின் மூலம் இந்த வைரஸ் பரவியதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
எப்படி பரவுகிறது?
மற்ற தொற்று வைரஸ்கள் பரவுவது போல்தான் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், தும்மல் மூலமாகவும் இவர்களுடன் கைகொடுத்தல் போன்ற உடல் ரீதியான தொடர்புகளினாலும் மற்றவர்களுக்குப் பரவுகிறது. அல்லது இந்த வைரஸ் ஏதோ இடத்தில் இருக்க அந்த இடத்துடன் உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்பட்டு நாம் நம் வாய், கை, கண் போன்றவற்றில் கையை வைக்கும் போதும் பரவுகிறது.
இதனால் சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாராக இருந்தாலும் பண்ணைகள், உயிருடன் விலங்குகள் விற்கும் சந்தை அல்லது இறைச்சிக்கூடம், ஆகியவற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரியாக சமைக்காத இறைச்சி உணவுகளையும் எடுத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீர் தீவிர மூச்சுக்குழல் பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை காய்ச்சல், இருமல் வரலாறு கொண்டவர்கள், அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையில் உள்ள மற்றும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இத்தகைய நோய் அறிகுறி உள்ளவர்கள் ஆகியோர் புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டு கண்காணிப்புச் சிகிச்சையில் வைக்கப்பட வேண்டும் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வுஹான் நகரில் 14 நாட்கள் தங்கியிருந்தவர் என்றால் அவரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவராகவே கருதப்பட்டு சிகிச்சைக் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
நோய் அறிகுறிகள் என்னென்ன?
தலைவலி, சளி, இருமல், தொண்டைக் கட்டு, காய்ச்சல், கடும் தும்மல், களைப்பு இதோடு கடும் ஆஸ்துமா, நிமோனியா, பிராங்கைட்டிஸ் எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றை நோய் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸின் அனைத்து கிளினிக்கல் அம்சங்களும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த வைரஸுக்கு எதிரான வாக்சைன்கள், மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த கொரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன. பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும், இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன. இதனால், இந்த வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
“முதல் முறையாகப் பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு ஒரு வைரஸ் பரவுவது இதுதான் முதல் முறை என்று கருதுகிறோம். எங்களுடைய இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வழிகளையும் நாங்கள் ஆய்வு செய்வோம்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சார்ஸ் வைரஸை ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் மரண விகிதம் குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 2003ஐ ஒப்பிடும் போது தற்போது சீனா உலக நாடுகளுடன் பெரிய அளவில் தொடர்பில் இருந்து வருகிறது. சீனாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
சார்ஸ் பாதிப்பின் போது சீன பொருளாதாரம் 5% அடி வாங்கியது. ஆனால் அந்த அடியிலிருந்து சீனா மீண்டு எழுந்தது. தற்போது இந்த கொரோனா வைரசினால் ஏற்படும் பொருளாதார பின் விளைவுகளும் அங்கு உற்று நோக்கப்பட்டு வருகின்றன.