கிழக்கு ஆபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியாவில் “லோகஸ்ற்” எனப்படும் வெட்டுக்கிளிப் படையெடுப்பு பயிர்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.
சூர்யா நடித்த “காப்பான்” படப் பாணியில் மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளி இனமாகக் கருதப்படும் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பல தசாப்தங்களில் இல்லாத அளவில் வெட்டுக்கிளிகள் மிகப் பெரிய திரளாகப் படையெடுத்துள்ளன.
ஏற்கனவே காலநிலைப் பாதிப்புக்குள்ளான கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் பில்லியன் கணக்கான கொடூரமான பூச்சிகள் ஆக்கிரமித்துள்ளன.
லோகஸ்ற் பூச்சிகளின் படையெடுப்பு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளனர்.
கென்யாவில் சுமார் 2,400 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 200 பில்லியன் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மதிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வெட்டுக்கிளியும் ஒவ்வொரு நாளும் அதன் எடையை ஒத்த உணவை உட்கொள்கிறது. பயிர்களை வெறித்தனமான வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
உகண்டா மற்றும் தெற்கு சூடானிலும் இந்தவகை வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.