சில குறிப்பிட்ட சமுதாயங்களில் திருமணத்தன்று மணப்பெண் கன்னித்தன்மையுடன் இல்லை என்பது தெரியவந்தால், அந்த திருமணமே நின்றுபோய்விடும் அபாயம் நிலவுவதால், அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஒரு வழக்கம் பரவத் தொடங்கியுள்ளது.
பெண்ணுறுப்புக்குள் காணப்படும் ஒரு மெல்லிய ஜவ்வு கிழிந்திருந்தால் அந்த பெண் கன்னித்தன்மை இழந்துவிட்டாள் என பலரும் அறியாமையால் நம்புவதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
உண்மையில், ஒரு பெண் திருமணத்துக்கு முன் தவறான உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே இந்த ஜவ்வு கிழிந்துபோகும் என்று பொருளில்லை, சைக்கிள் ஓட்டும் பெண்கள் மற்றும் ஓடப்பந்தயங்களில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளுக்கு கூட அப்படி நடந்துவிடுவதுண்டு.
ஆனால், சில குறிப்பிட்ட சமுதாயங்களில், திருமணத்தன்று ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பது இந்த ஜவ்வு கிழியாமல் இருப்பதை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது என்பதுதான் சோகம்! லண்டனில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலைமறைவாக வாழ்ந்துவருகிறாளாம்.
அவரது தந்தை அவளைக் கொல்வதற்காக கூலிக்கு ஆட்களை ஏற்பாடு செய்துள்ளதால் தான் அவளுக்கு இந்த பரிதாப நிலை.
2014இல் பிரித்தானியாவுக்கு படிப்பதற்காக வந்த அந்த மொராக்கோ நாட்டவரான இளம்பெண், ஒருவரைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறாள்.
இந்த விடயம் தெரிந்ததும், அவளை சொந்த நாட்டுக்கு வரவழைத்த அவளது தந்தை, அவள் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா என்பதை அறிவதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்று சோதித்திருக்கிறார்.
அவளது பிறப்புறுப்பிலுள்ள அந்த ஜவ்வு கிழிந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்ததும், அந்த பெண் நாட்டை விட்டு தப்பி லண்டனுக்கு வந்து, எப்போது தன் தந்தை தன்னைக் கண்டுபிடித்துக் கொல்வார் என்ற அச்சத்திலேயே தலைமறைவாக வாழ்கிறாளாம்.
இந்நிலையில், பெண்ணுறுப்பிலுள்ள அந்த ஜவ்வை அறுவை சிகிச்சை மூலம் தைக்கும் ஒரு சிகிச்சை பிரித்தானியாவில் பரவிவருகிறது.
சிலர் சமுதாயத்துக்கு பயந்தும் வேறு சிலர் குடும்ப உறுப்பினர்களால் கட்டாயப்படுத்தப்பட்டும் இந்த சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், சட்ட விரோதமாக பல மருத்துவமனைகள் இந்த சிகிச்சையை செய்யத் தொடங்கியுள்ளனவாம்.
உங்கள் முதலிரவின்போது நீங்கள் கன்னித்தன்மையுடன் இல்லாமலிருப்பது தெரியவந்தால் என்ன ஆகும்? சில திருமணங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன தெரியுமா?என்பதுபோன்ற அச்சுறுத்தும் வகையிலான விளம்பரங்கள் இணையத்தில் உலாவரத்தொடங்கியுள்ளனவாம்.
ஆனால், இந்த சிகிச்சையால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல நீண்ட கால பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த சிகிச்சைக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
சரியான முறையில் கவனத்துடன் மேற்கொள்ளப்படாவிட்டல், இந்த சிகிச்சையால் மரணம் கூட ஏற்படலாம் ஏற்படலாம் என மருத்துவர்கள் சிலரும் எச்சரித்துள்ளனர்.