வழக்கு ஒன்றில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விமர்சித்துள்ளதைத் தொடர்ந்து நீதித்துறையின் உச்ச நீதிபதிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
60 வயதுகளிலிருக்கும் Sarah Halimi என்ற ஆச்சாரமான யூத இனப்பெண்மணியை, பாரீஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஜன்னலிலிருந்து அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி ஒருவர் தள்ளிவிட, பரிதாபமாக பலியானார் அவர்.
தீவிரவாத எண்ணம் கொண்ட இஸ்லாமிய இளைஞர்களிடையே யூத இன வெறுப்பு அதிகரிப்பு உருவாகி வருவதாக நாடெங்கும் விவாதங்கள் உருவாக இந்த சம்பவம் வழிவகுத்தது.
ஆனால், அதிகமாக கஞ்சா புகைக்கும் ஒருவர் இந்த செயலை செய்ததாகவும், அவர் அந்த பெண்மணியை தள்ளிவிட்டது போதையில்தான் என்றும், ஆகவே அவரது குற்றச் செயல்களுக்கு அவர் காரணமில்லை என்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சமீபத்தில் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முதலில் இது நீதித்துறை தொடர்பான விடயம் என்றும், நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க இயலாது என்றும், ஒரு ஜனாதிபதியாக நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் கூறினார்.
ஆனால், பின்னர் பேசிய மேக்ரான், நீதிபதி வழக்கின் முடிவில் குற்றச்செயல் எதுவும் நடைபெறவில்லை என முடிவு செய்தாலும், விசாரணைக்கான அவசியம் இருக்கிறது என்றார்.
அவர் அந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையின் உச்ச நீதிபதிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன.
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று கூறும் ஜனாதிபதி, அதைத்தான் செய்கிறார் என்று ஒருவர் கூற, மற்றொருவர், மேக்ரானின் கருத்துக்களைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரான்சைப் பொருத்தவரை, மீண்டும் யூத இனவெறுப்பு தலைகாட்டத் தொடங்கியுள்ளதை மறுக்க இயலாது.
Sarah Halimiயின் வழக்கில், அதை யூத இன வெறுப்பு குற்றம் என நீதிபதிகள் அறிவிக்க தயங்கியது, பிரான்சில் வாழும் யூதர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமீப காலமாகவே, பிரான்ஸ் நாட்டில் வாழும் யூதர்கள் ஜிகாதிகளால் தாக்கப்பட்டு வருவதற்கு, சமீபத்தில் நடந்த யூத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான தாக்குதலே மிகச் சரியான உதாரணமாகும் என்று கருதப்படுகிறது.