தமிழகத்தில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன் வசமாக சிக்கிகொண்ட நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஜெயவேல் (38). இவர் மனைவி திலகம் (37). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி திலகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசில் ஜெயவேல் தெரிவித்தார்.
மேலும் வீட்டுக்குப் புதியதாக வாஷிங் மெஷின் வாங்கி வந்தேன். அது, திலகத்துக்குப் பிடிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மனமுடைந்த திலகம், புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததாக ஜெயவேல் கூறினார்.
ஆனால் திலகத்தின் கழுத்திலும், முகத்திலும் இரத்த காயங்கள் இருந்தது பொலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதோடு திலகத்தின் சடலத்தை ஒரே ஆளாக எப்படி கீழே இறக்கினாய் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயவேல், முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவியை கொன்றதை ஒப்பு கொண்டார்.
அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிசில் வாக்குமூலம் அளித்தார். இது குறித்து பொலிசார் கூறுகையில், திலகத்தின் தோழியுடன் ஜெயவேலுக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் தான் ஓட்டிவரும் மினி லொறியின் கண்ணாடியில் திலகத்தின் பெயரோடு அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலகம், என்னைக் கொன்றுவிட்டு அவளோடு சந்தோஷமாக வாழு என்று ஆத்திரத்தில் கூறியுள்ளார்.
பின்னர், வீட்டைவிட்டு வெளியில் சென்ற ஜெயவேல், மது அருந்தியுள்ளார். வீடு திரும்பிய பிறகும் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொன்றுள்ளார்.
இதையடுத்து திலகம் தற்கொலை செய்துகொண்டதுபோல நாடகமாடியுள்ளார் என கூறியுள்ளனர்.