விமான நிலையத்தில் காய்ச்சல் தடுப்பு மருந்தை ரகசியமாக எடுத்துக்கொண்ட ஒரு சீனப்பயணியை கவனித்த பயணிகள் குழு விமானத்தில் ஏற மாட்டோம் என வாக்குவாதம் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறைந்தது 106 பேரை பலிகொண்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 4,588 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை தடுக்க, மருத்துவர்கள் அனைவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வைரஸ் தொற்று ஆரம்பமான வுஹான் நகர மக்களுடன் ஜப்பானை சேர்ந்த சிலர் விமானத்தில் பயணிக்க மறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
நாகோயாவிலிருந்து சீனா சதர்ன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஷாங்காய் செல்லும் சி.இசட் 380 விமானத்தில், ஷாங்காய் பயணிகள் 70 பேரும், வுஹான் நகரத்தை சேர்ந்த 16 பேரும் பயணிக்க தயாராக இருந்தனர்.
அப்போது வுஹான் நகரத்திலிருந்து வருகை தந்திருந்த ஒருவர், காய்ச்சல் தடுப்பு மருந்தை ரகசியமாக எடுத்துக்கொண்டதை ஷாங்காய் நகர பயணி ஒருவர் கவனித்துள்ளார்.
அவர்களுடன் பயணித்தால் தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடுமோ என்கிற அச்சத்தில், வுஹான் பயணிகளுடன் ஒரே விமானத்தில் செல்ல மாட்டோம். அவர்கள் அனைவரையும் தடை செய்யுங்கள் என, ஜப்பானின் நாகோயா நகருக்கு அருகிலுள்ள சுபு சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையத்திலேயே மற்ற பயணிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து விமான நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில், சீனா தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், ஒரே விமானத்தில் அனைவரும் பயணித்துள்ளனர்.
இதனால் இரண்டு மணி நேர விமானப்பயணம் ஐந்து மணி நேர தாமதத்திற்கு வழிவகுத்துள்ளது.