பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்த விடயங்கள் வெளியாகின. இதன் காரணமாக இவர்களை அங்கொடையில் உள்ள I.D.H க்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜாசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து வைத்தியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உடைகள் வழங்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரதும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதில் இவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள், இலங்கையில் தங்கியிருக்கும் இடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதற்கான ஆவணங்கள் சீன மொழியில் இல்லாததனால், சீன மொழியிலான ஆவணங்கள், படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் சகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயங்களை திரட்டுவதன் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு தொற்றுநோய் தடுப்பு வைத்தியர்களை ஈடுபடுத்தி அவர்கள் பிரிசோதிக்கப்படவுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று விமானங்களுக்கு விசேட காணொளிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவைப் ஏற்படுத்த முடியும்
இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கப்பல் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
தற்பொழுது புதிய கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையை பொரளையில் உள்ள வைத்திய ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ள முடியும் எனவும், இதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் பிரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய வைத்திய பரிசோதனை ஆற்றல் இலங்கை மற்றும் சீனாவில் புனே மாநிலத்தில் மாத்திரமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்று அனைத்து மாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிறுபம் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாட்டில் கொழும்பு உள்ளிட்ட அண்டிய பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் முகத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் முக மூடிகளை (Masks) பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் இவற்றை தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.