ஆப்கானிஸ்தானில் தலிபான்களளால் சிறை வைக்கப்பட்ட 62 ராணுவ வீரர்களை ஆப்கான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.
அவர்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவமும், பொலிஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல சமயங்களில் பொலிஸாரையும், இராணுவத்தினரையுமே தலிபான்கள் கடத்தி சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு காலகட்டங்களில் கடத்தப்பட்ட 62 இராணுவ வீரர்களை தலிபான்கள் பட்கிஸ் மாகாணத்தில் உள்ள பாலா முர்ஹாப் பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக இராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதிரடி தாக்குதலுக்கு திட்டமிட்ட ராணுவத்தினர் தலிபான்களின் ஆக்கிரமிப்பு பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட தலிபான்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஆப்கான் செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.