கொழும்பு, இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை இன்று (1) முதல் ஆரம்பமாகவுள்ளது.
நேர அட்டவணையின் அடிப்படையிலான தனியார் விமான சேவைகளை அறிமுகம் செய்து பிற்ஸ் எயார் (FitsAir) நிறுவனம் முதலாவது நிறுவனமாக சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8.20 மணிக்கும் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.
இரண்டு மணி நேர பயணம் கொண்ட குறித்த விமான வழித்தடத்தில் விமானப்படை விமானம் 9 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் நிலையில், பிற்ஸ் எயார் நிறுவன விமானம் 7 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தில் தனது சேவையை முன்னெடுக்கவுள்ளது.
அத்துடன், இந்த விமான சேவைக்காக 70 ஆசனங்களைக் கொண்ட ATR-72 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, இந்த நிறுவனம் ஏற்கனவே மட்டக்களப்புக்கு தனது விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.