சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர், அங்கிருந்து வரும் அனைவரையும் நோயாளியாகப் பார்க்கும் மனநிலை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
சீனா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகள் கொடிய கொரோனா வியாதிக்கு இலக்காகியுள்ள நிலையில்,
அங்கிருந்து தமிழகத்தின் புதுக்கோட்டைக்கு திரும்பிய மருத்துவ மாணவர் அமிஸ் பிரியன், கொரோனா தொடர்பில் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமிஸ் பிரியன், கடந்த நான்கு ஆண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவம் பயின்று வருகிறேன்.
நான் படிக்கும் கல்லூரி, பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணத்தில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
எங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை சொந்த ஊர்களுக்குத் திரும்ப சொல்லிவிட்டதால் வந்துள்ளேன்.
ஆனால் சீனாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பலமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிலும், விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்கிறார்கள்.
காய்ச்சல் இருந்தால், உடனடி சோதனை செய்கிறார்கள். யாரும் அச்சப்படவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சீனாவில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவரையும், திருவண்ணாமலை வந்த இளைஞர் ஒருவரையும் பரிசோதனை செய்ததில் இருவரிடமும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படவில்லை என தமிழக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா வியாதிக்கு இரையான இளம்பெண் ஒருவர், தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.