அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 1 லட்சம் பேர், குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையே உள்ள சிறிய நகரமான கான்பெராவில் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
கான்பெராவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கான்பெராவின் தென்பகுதியில் 18,500 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கி உள்ளது.
இந்நிலையில் தலைநகரான கான்பெராவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், கான்பெரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.