கம்பஹா – வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மரக்கறி லொரியொன்றை இடைமறித்து அதிலிருந்து நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக லொரியின் சாரதி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கெப்பட்டிபொல, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறிகளை சேர்த்து வந்து அவற்றை வெயாங்கொடவில் விற்பனை செய்ததால் கிடைத்த பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலொன்றில் வந்த இருவர் குறித்த லொறியை இடைமறித்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும், நள்ளிரவு 12.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னிடம் பணமில்லை எனக் கூறிய சாரதியை அச்சுறுத்தியே பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸாரும், ஹட்டன் கைரேகை பிரிவினரும் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.