ஊவா பரணகமவின் கோரடெகும்புர கிராம மக்கள் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஊவா மாகாணத்திற்கு சொந்தமான பாரம்பரிய தற்காப்புக் கலைகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தனியொருவரால் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியில், தற்போது முழு கிராமமுமே ஈடுபடுகிறது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் அவர்கள் ஒரு முன்மாதிரியான சமூகமாக பார்க்கப்படுகிறார்கள்.
அதிகாலைக் குளிரைப் பொருட்படுத்தாமல், ஓய்வுபெற்ற பொது சுகாதார ஆய்வாளரான கராத்தே ஆசிரியர் ஒருவரின் பயிற்சியின் கீழ் குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் ஒரு மைதானத்தில் தினமும் பயிற்சிக்காக ஒன்று கூடுகிறார்கள்.
கோரடெம்புர விளையாட்டு மைதானத்தில் அதிகாலை 5.30 மணிக்கு ஒரு மணி நேரம் இந்த பயிற்சிகள் நடக்கும். சாதாரண உடற்பயிற்சிகளில் தொடங்கி, ஊவா மாகாணத்திற்குச் சொந்தமான தற்காப்புக் கலைகள் வரை அங்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
கோரடேகும்புர கிராமம் இப்பொழுது கராத்தே கிராமம் என்று இப்பொழுது அறியப்படுகிறது.
2016 ஓகஸ்டில் பாடாலை மாணவர்களை இலக்காக கொண்டு, ஓய்வு பெற்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஜெயவீர ஜெயசுந்தரவினால் இந்த பயிற்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், முழு கிராமமும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.
சிறுநீரக நோய்கள், பக்கவாதம், மூட்டுவலி, ஆஸ்துமா போன்றவற்றைச் சந்தித்த கிராமவாசிகள் தவறாமல் உடற்பயிற்சி செய்தபின் உடல்நலம் திரும்பியதாகக் கூறுகின்றனர்.
இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள்.
67 வயதான ஜே.எம்.நந்தாவதி, “எனக்கு 49 வயதாக இருந்தபோது, எனக்கு பக்கவாதம் ஏற்பட்டு பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பக்கவாதத்தைத் தொடர்ந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது, என் மார்பில் வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில், பி.எச்.ஐ. ஜெயசுந்தரவால் கோரடகும்புரா விளையாட்டு மைதானத்தில் ஒரு உடல் உடற்பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.
நாங்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.30 மணியளவில் டோர்ச் லைட் வெளிச்சத்துடன் விளையாட்டு மைதானத்தில் கூடுகிறோம். காலை 6:30 மணி வரை உடற்பயிற்சி செய்கிறோம். இப்போது ஆரோக்கியமான வாழ்க்கை கிடைப்பது எனக்கு அதிர்ஷ்டம். பதுளை பொது மருத்துவமனை கிளினிக்கின் மருத்துவர்களை நான் கலந்தாலோசித்தபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பயிற்சிகள் காரணமாக நான் வேகமாக குணமடைகிறேன் என மருத்துவர்கள் சொன்னார்கள்.“ என்றார்.
ஊவா மாகாணத்திற்குரிய வாள் சண்டை கலையும் அங்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
6,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பறக்கும் இயந்திரத்தை கட்டியதாக கூறப்படும் ராவணன் இராச்சியம் என்பதால் பதுளை பிரபலமானது என்று கோட்டாவேர காஷ்யப தேரர் கூறினார்.
“ஊவாவில் தற்காப்புக் கலைகளில் ஒரு குறிப்பிட்ட முறை இருந்தது. இவை விவசாயத்துடன் சேர்ந்து வளர்ந்தன என்று எங்கள் பெரியவர்கள் கூறுகிறார்கள். விலங்குகளுடன் சண்டை படித்த அவர்கள் தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவத்தை உருவாக்கியிருந்தனர். மக்கள் தங்கள் நெல் வயல்களில் இருந்து போர்க்களத்திற்குச் சென்றதால், அவர்கள் மண்வெட்டி, கத்தி, அரிவாள் போன்ற கருவிகளை ஆயுதங்களாக எடுத்துக்கொண்டார்கள்“ என்றார்.
1818 ஆம் ஆண்டில், சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ் படைகள் ஊவாவைத் கைப்பற்றிய பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உவா தற்காப்புக் கலைகளை 1821 இல் வர்த்தமானி அறிவிப்பால் தடை செய்ததாகவும் தேரர் கூறினார். “இந்த தற்காப்பு கலை நுட்பங்கள் சில பின்னர் நடனத்தில் சேர்க்கப்பட்டன. தெய்வங்களுக்காக நிகழ்த்தப்பட்ட நடனங்களில் அவை சேர்க்கப்பட்டதால், வெலிமட மற்றும் ஊவா பரணகம கிராமங்களில் உள்ள பத்தினி, சந்துன் குமத்து கோயில்களில் இன்னும் அவற்றைக் காண முடிந்தது. அவற்றை மீள மக்களிடம் அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்கது என தேரர் கூறினார்.