வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி நாடாளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் யாழ் மண்ணிற்கு விஜயம் செய்த முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்த மண்ணுக்கான சேவைகளை ஓர் ஆளுநராக பிரதிபலன் பராது வழங்கியது போன்று தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஓர் வேட்பாளராக வரவேண்டும் என்று புலம்பெயர்தமிழர்கள் உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்பாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆளுநராக இருந்த காலப்பகுதியில் மக்களுக்கு நலன்தரும் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றின் தொடர்ச்சியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அது தொடர்பிலான ஆற்றலுள்ளவர்களே நம் மண்ணுக்கு வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவதற்கான ஓர்பாலமாக முன்னாள் ஆளுநர் இருப்பார் என்றும் குறிப்பிட்டனர். எனவே முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்வாங்கி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அவரது சேவைகள் தமிழ் மக்களுக்கு மீண்டும் தொடர வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்தனர்.