யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் காணி உரிமையாளர்களை அச்சுறுத்தி தொடர் மணல் கொள்ளை இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக தமது கிராமத்திற்குள் கடல்நீர் புகும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அரியாலை உதயபுரம் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் பகுதியிலுள்ள தனியார் காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் மணல் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இரவு நேரங்களில் உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சகிதம் நுழையும் மணற்கொள்ளையர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மக்களின் முறைப்பாடுகளை அடுத்து யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட பொலிஸ் குழுக்கள் அரியாலை, உதயபுரம், பூம்புகார் மற்றும் நாவலடி பகுதியில் 24 மணிநேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளன.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய முற்பட்ட போதிலும் அந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது.
பொலிஸார் வருகைதருவதை முன்கூட்டியே அறிந்த மணற்கொள்ளையர்கள், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக தமது கிராமத்திலுள்ள நன்னீர் உவர் நீராக மாறும் அபாய நிலை காணப்படுவதாகவும் உதயபுரம் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.