சுவாசம், பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு உள்ளிட்ட காரணிகளாலே கொரோனா வைரஸ் பரவுவதாக கருதப்பட்டு வந்த நிலையில், மலத்தின் மூலம் அதிகம் பரவுவதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் அதிகமான உயிர்பலி ஏற்பட்டிருப்பதோடு, 14300 பேர் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் தொற்றானது, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு மற்றும் சுவாசம் துளிகள் மேலே படுவதாலே பரவுவதாக அதிகாரிகள் முன்பு நினைத்திருந்தனர்.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட சிலரின் மல மாதிரிகளில், கொரோனா வைரஸின் மரபணு தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக ஷென்ஜென் சுகாதார ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் வெடிப்பின் மையப்பகுதியான வுஹான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற இடங்களில் இதேபோன்ற முடிவுகள் கிடைத்துள்ளன. சில விஞ்ஞானிகள், மனித வெளியேற்றத்தின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக கூறியுள்ளனர்.
சீன அறிவியல் அகாடமியால் நிர்வாகிக்கப்படும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் ஷி ஜெங்லியின் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், நகரத்தில் உள்ள கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளின் குழுவிலிருந்து எடுக்கப்பட்ட மல மாதிரிகளில் இருந்து நியூக்ளிக் அமிலங்களைக் கண்டறிந்ததாக மாநில செய்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முறை மூலம் பரவுவதை நிரூபிக்க மேலதிக விசாரணை தேவை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் ஆராய்ச்சியாளர் திரு ஃபெங் லுஷாவோ கூறியுள்ளார்.