ஜேர்மனிக்கு பக்கத்தில் உள்ள போலந்தில் காட்டுப்பன்றி ஒன்றிற்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், ஜேர்மன் விவசாயிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
ஜேர்மனி எல்லைக்கு 12 கிலோமீற்றர் தொலைவில், போலந்தில், காட்டுப்பன்றி ஒன்றிற்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல் ஜேர்மனியில் உள்ள பன்றிகளுக்கு பரவியதாக தகவல் வந்தால், அது பன்றி ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதற்கு வழி வகுக்கும்.
பன்றி ஏற்றுமதியில் பெரும் லாபம் பார்த்துவரும் ஜேர்மன் விவசாயிகளை அது கடுமையாக பாதிக்கும்.
உலகில் அதிக அளவு பன்றி இறைச்சி உண்ணும் சீனாவுக்கு ஜேர்மனி பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிலையில், ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு, ஜேர்மனிக்கு பன்றிக்குட்டிகளை வழங்கும் நெதர்லாந்து மற்றும் டென்மார்க்கும் மறைமுகமாக பாதிக்கப்படும்.
எனவே, காட்டுப்பன்றிகள் ஜேர்மன் கிராமங்களுக்குள் வருவதை தடுக்கும் வகையில், Brandenburg மாகாணத்தில் 120 கிலோமீற்றர் தொலைவுக்கு ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
என்றாலும், காட்டுப்பன்றிகள் மிகவும் வலிமையானவை என்பதால், இந்த வேலி அவற்றை எந்த அளவுக்கு தடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை என Brandenburg மாகாண சுகாதார மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.