அரை சொகுசு பேருந்து சேவையை தொடர்வது அவசியமானதா என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (என்.டி.சி) நடத்திய ஆய்வு, இந்த வாரம் இறுதியில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அரை சொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியிருந்தார்.
“சுமார் 400 அரைச் சொகுநு பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. சேவையை நிறுத்துவதற்கு முன், அந்த பேருந்துகளை பயன்படுத்தும் மாற்று வழிகளை கருத்தில் கொள்வது பொருத்தமானது” என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அரை சொகுசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டால் பேச்சுவார்த்தைகளை நடத்தவும், மாற்று வழிகள் குறித்தும், பேருந்துகளை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்றும் என்.டி.சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரைச் சொகுசு பேருந்து சர்ச்சை தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கடந்த சனிக்கிழமை மேலும் ஒரு விவகாரம் சர்ச்சையாகியிருந்தது.
கடந்த சனிக்கிழமை நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு பயணித்த பயணிகளிடம், அரைச்சொகுசு என குறிப்பிட்டு பேருந்து ஒன்று அதிக பணம் வசூலித்துள்ளது. இது குறித்த சர்ச்சை எழுந்ததும், உடனடி அறிக்கை சமர்ப்பிக்கும்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டிருந்தார்.
“இந்த பேருந்து சாதாரண சேவை வகையைச் சேர்ந்தது. நுவரெலியா மற்றும் கொழும்பு இடையே இயக்க தற்காலிக பாதை அனுமதி வழங்கப்பட்டது. ஒரு சாதாரண பேருந்து கம்பளையிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகளிடமிருந்து 185 ரூபா வசூலிக்கிறது.
இருப்பினும், இந்த பேருந்தில் 278 ரூபா கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, இது அரை சொகுசு சேவையின் கட்டணம் என்று கூறப்படுகிறது” என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
சாதாரண சேவை பேருந்தில் பெரதெனியாவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பயணிகளிடமிருந்து 175 ரூபா வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்த 251 ரூபா வசூலித்தது.
“இந்த பேருந்து கடுமையான தவறு செய்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
எனவே, பேருந்தின் பாதை அனுமதியை இரத்து செய்வதற்கு முன் உடனடியாக அறிக்கை அளிக்குமாறு அமைச்சர் கோரியிருந்தார். அத்துடன், சாதாரண சேவை பேருந்துக்கு அரை சொகுசு சேவை பாதை அனுமதி வழங்கிய பொறுப்புள்ள நபரைக் கண்டுபிடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
அரை சொகுசு சேவைக்குரிய வசதிகளை வழங்குவதில் பேருந்து கவனம் செலுத்தவில்லை. மாறாக பொதுமக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதிலேயே குறியாக இருந்தது என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.