ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சாமிமலை கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அமைய 3 ஆம் திகதியன்று புதிய அதிபரை ஹட்டன் கல்வி வலய பணிமனையினால் நியமித்தமைக்கு அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், வித்தியாலயத்தில் தற்போது சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ளுவதற்கு அதிபர் ஒருவர் இல்லாத நிலை எழுந்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் எமது பாடசாலையில் பணியாற்றிய அதிபரின் நிருவாகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் காரணமாக பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன் க.பொ.த உயர் தரம் வரை உள்ள எமது பாடசாலைக்கு 3ஆம் நிலை அதிபரை நியமித்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம்.
கடந்த காலத்தில் எமது பாடசாலையில் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அட்டன் கல்வி பணிப்பாளர் எடுக்காமல் இருப்பது பணிப்பாளரின் அசமந்த போக்கை வெளிப்படுத்துகிறது. இந்நிதி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிபரை ஹட்டன் கல்வி வலய கல்வி பணிமனையில் பணிக்கு அமர்த்தியுமுள்ளனர். எனவே பாடசாலையில் இடம்பெற்ற நிதி மற்றும் நிருவாக முறைகேடுகள் குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மாகாண கல்வி திணைகள அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் உள்ளிட்டோர் தகுதி நிறைந்த ஒரு அதிபரை பாடசாலைக்கு நியமித்திருந்தால் இன்று இவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவை ஏற்பட்டிருக்காது.
தற்போது அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை மீள் அழைப்பு செய்து விட்டு முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை தகுதியுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோருகின்றோம்.
அவ்வாறானதொரு அதிபர் மாற்றத்தை செய்ய முடியாவிட்டால் தயவு செய்து எமது மாணவர்களின் விடுகை பத்திரத்தை வழங்கி வேறு பாடசாலையில் இணைப்பதற்கான அனுமதியை ஹட்டன் கல்வி வலயம் மேற்கொண்டு தரவேண்டும் என குறிப்பிட்டனர்.
நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களினாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தினால் மஸ்கெலியா சாமிமலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.