சகல வேறுபாடுகளையும் மறந்து இலங்கையர் என்றடிப்படையில் அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப முன் வரவேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா தெரிவித்துள்ளார்.
72வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளின் திருகோணமலை மாவட்ட செயலக நிகழ்வுகள் இன்று மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அன்று சுதந்திரத்திற்காக எமது தலைவர்கள் இன மத மொழி வேறுபாடின்றி நாட்டின் நலனை முன்னுரிமைப்படுத்தி செயற்பட்டார்கள். பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்பதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாக எம்மை விட பிந்திய நிலையில் இருந்த பல நாடுகள் இன்று எம்மைவிட பல இடங்கள் முன்னேறியுள்ளன.எனவே நாமும் வளமான தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் பங்குதாரர்களாக மாற வேண்டும்.
எம் மத்தியில் உள்ள சந்தேகங்களை தெளியப்படல் வேண்டும். ஒழுக்கம் நிறைந்த சமூகமொன்றை கட்டியெழுப்பல் காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்திக்கு அறிவாற்றல் மிக்க பிரிவினர் அதிகம் வேண்டப்படுகின்றனர்.
பேண்தகு அபிவிருத்தியின் இலக்குகள் நிறைவேறும் வகையில் சகல செயற்பாடுகளையும் மேற்கொள்ளல் இன்றியமையாதது.
எதிர்கால பரம்பரை சிறப்பாக வாழக்கூடிய தேசமொன்றை ஏற்படுத்திக் கொடுப்பது எம் அனைவரது பொறுப்பாகும், என்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலக வளாகம் மற்றும் சர்தாபுர உள்ளக சுற்று பாதையோரங்களிலும் மர நடுகை நிகழ்வும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டது.