இன்று தேசிய சுதந்திர தினத்தை ஒரு தரப்பினர் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், அது என்ன சுதந்திர தினம் என்று கேட்கவிரும்புகின்றோம் என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினரான துமிந்த நாகமுவ கேள்வியெழுப்பியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை சொன்னபடி வழங்க வேண்டுமென வலியுறுத்தி மலையகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும், முன்னிலை சோஷலிஸக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“மத்திய வங்கி கொள்ளையிடப்பட்டதையா கொண்டாடுகிறீர்கள்? அன்று அரிசி கிலோ ஒன்றை கொள்வனவு செய்யமுடியாத நிலை மக்களுக்கு உள்ளது. மக்களின் பணத்தை கொள்ளையிட்ட சுதந்திர தினத்தையா கொண்டாடுகிறீர்கள்.
ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இந்த நாட்டை கொள்ளையிட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை தயார் செய்து அந்த நாடுகளின் தூதரகங்களை ஒன்றுசேர்த்து கொண்டாடும் சுதந்திர தினமா இது?
இன்று உண்மையான சுதந்திரம் இந்நாட்டு மக்களுக்கு இல்லை. மார்ச் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதாக கோட்டாபய கூறுகின்றார்.
அன்றைய தினம்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது. இந்நிலையில் அனைத்தையும் பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
இது பொய்யான வாக்குறுதி. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்.
இருந்தாலும் ஆயிரம் ரூபா போதும் என்று அறிவிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு அந்த ஆயிரம் ரூபாவை வைத்து ஒருநாள் ஜீவியத்தை கொண்டுசெல்ல முடியுமா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.