விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கட்டைக்காடு கேவில் பகுதி மக்களுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றது. அங்கு கலந்து கொண்ட மக்கள், விமல் வீரவன்சவின் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி தேடுங்கள் என்ற கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து, இந்த அரசாங்கம் தாங்கள் புதைத்த இடத்தைக்காட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த சிறிதரன், இந்த நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களை கொடூர வெறியுடனே பார்ப்பதாகவும், தமிழர்களின் இரத்தங்களைக்குடிக்க காத்துக்கொண்டிருப்பது போன்றும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்து கொண்டிருப்பதுடன், வீமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனவும், இந்த அரசு தமிழர்களை அடக்கி ஆளவும் ஓடுக்கி ஆளவும் தொடர்ந்து முயற்சிக்கிறது என குறிப்பிட்டார்.
சிங்களத் தலைவர்கள் கடந்த கால படிப்பினைகளில் இருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை எனவும் எமது உரிமைகளைத் தர மறுத்த போதுதான் தமிழர்கள் போராடினார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், உபதவிசாளர் கயன், பிரதேசசபை உறுப்பினர்களான றமேஸ், வீரவாகுதேவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஞானம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.