கூடுவாஞ்சேரி தனியார் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதலில் துப்பாக்கியால் ஒரு மாணவர் இன்னொருவரைச் சுட முயல, அவர் தப்பித்து ஓடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அது துப்பாக்கி அல்ல சிகரெட் லைட்டர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்களுக்குள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்டனர். இந்த மோதலை கல்லூரிக்குள்ளேயே படமெடுத்த நபர் ஒருவர், அதை சமூக வலைதளத்தில் பகிர, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் மாணவர்கள் தங்களுக்குள் கத்தியுடன் மோதுவது பதிவாகியுள்ளது. மேலும், தாக்குதலிலிருந்து தப்பிக்கும் மாணவர் ஒருவரை தொப்பி அணிந்த மாணவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நகர்வதும் பதிவாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட முயலும்போது எதிர்த்தரப்பு மாணவர் பாய்ந்து அவரை எட்டி உதைப்பதும், அதனால் துப்பாக்கியைக் கையில் வைத்துள்ள மாணவர் கீழே விழுவதும் பதிவாகியுள்ளது. அதற்குள் மற்ற மாணவர்கள் அவரைத் தாக்கி பிடிக்க முயன்றனர். இதனால் அந்த மாணவர் தப்பி ஓட முயல, துப்பாக்கியுடன் இருக்கும் மாணவர் எழுந்து அவரை துரத்திச் செல்வதும் மற்ற மாணவர்கள் சுடுடா சுடுடா என கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் கல்லூரிக்குச் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களையும் போலீஸார் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி கண்ணனைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் தொடர்புக்கு வரவில்லை.
டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் பேசி இதுகுறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது:
தனியார் கல்லூரியில் மாணவர்கள் மோதலில் துப்பாக்கி, கத்திகளுடன் மோதியுள்ளது வைரலாகியுள்ளதே? துப்பாக்கி பயன்படுத்திய மாணவரைப் பிடித்துள்ளீர்களா?
அது துப்பாக்கி இல்லை, சிகரெட் லைட்டர். துப்பாக்கி போல் இருக்கும் சிகரெட் லைட்டர்.
விஷுவலில் அவர் கையில் பெரிதாக துப்பாக்கி போல் வைத்துள்ளார்? அவர் மற்ற மாணவரை துரத்தும்போது மற்றவர்கள் சுடு சுடு என்கிறார்களே?
அது எனக்குத் தெரியவில்லை. சுடு சுடு என்றும் யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. அந்த லைட்டரை அவர் அமேசானில் 5999 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
அவரைப் பிடித்துவிட்டீர்களா? பிடித்து ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஆண்டு வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் முகேஷ் என்பவரை அவருடைய நண்பர் விஜய் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துப்பாக்கி குப்பைத்தொட்டியில் கிடந்தது. அதை எடுத்துவந்தேன் என விஜய் விசாரணையில் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.