தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று தனது 87வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், வாழும் வீரர் என்ற சாரப்படவும், அவர் மீதான விமர்சனமுடையோர் கிட்டத்தட்ட துரோகி என்பதை போலவும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்கள் எங்கும் சம்பந்தன் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் சம அளவில் பதிவுகள் தென்படுகின்றன.
தனது சொந்த மக்களின் ஒரு பகுதினரினால் வாழும் வீரராகவும், இன்னொரு பகுதினரிடம் துரோகியாகவும் வர்ணிக்கப்படும் சம்பந்தன் யார்? வாழும் வீரரா? துரோகியா?
தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரின் மீதும் விமர்சனம் இருந்தது. தமிழ் மக்களின் பெரும்பகுதியினரால் கடவுளை போல கொண்டாடப்படும் பிரபாகரன் உயிருடன் இருந்த காலப்பகுதியிலேயே அவரின் மீது விமர்சனம் வைத்தவர்கள் இருந்தனர். ஆனால், அது சிறிய குழு.
இரா.சம்பந்தன் அப்படியல்ல. அவரை கொண்டாடுபவர்களை போல, நிராகரிப்பவர்களும் கணிசமானவர்கள். தமிழ் மக்களின் தலைவர்கள் என கொள்ளப்பட்ட யாருமே, சம்பந்தன் அளவிற்கு எதிர் விமர்சனங்களை கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் தலைவர்களாக விளங்கியவர்களை, அவர்களின் செயற்பாட்டு காலத்தில் விமர்சனம் செய்வதற்கு பலர் அஞ்சினர். அவர்கள் மீதான விமர்சனம் வைப்பதே, ஒரு பாவமான காரியமாக கருதப்பட்ட காலமும் இருந்தது.
ஆனால், இரா.சம்பந்தனின் தலைமை மீதான விமர்சனம் நாளாக ஆன வலுத்து, அவரை ஆதரிப்பவர்கள் அளவிற்கு, விமர்சிப்பவர்ளும் இருக்கிறார்கள். தமிழ் தேசிய இனமாக திரட்ட பின்னர், இப்படியொரு நிலைமையை தமிழர்கள் எதிர்கொண்டிருக்கவில்லை. இதுவே, தமிழினத்தின் இன்றைய சரிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.
யுத்தத்தின் பின்னரான ஒவ்வொரு நாள் முடிவிலும் தமிழர்கள் அதிகம் அதிகமாக கூறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கூறுபட்டவர்களே மிக அதிகமானவர்கள்.
முறையை தலைமையொன்று தமிழர்களிற்கு இல்லாத நிலையில், இடைமாறு காலகட்டத்தின் தலைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் காலம் ஒப்படைத்தது. இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை, செயற்பாட்டு வழியில் தலைமையிடத்தை பெறவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒரு நாடக பாத்திரத்தை வகிக்க நியமிக்கப்பட்டவர்கள், திடீரென மேடையின் முன்னால் இழுத்து விடப்பட்டதை போல, தலைமை பாத்திரத்தை ஏற்றார்கள்.
யுத்தத்தின் பின்னரான கடந்த பதினொரு வருடங்களில் இரா.சம்பந்தனின் தலைமையிலான கூட்டமைப்பின் முதன்மை பணி, இடைமாறுகாலகட்டத்தை பராமரித்து, தமிழ் சமூகத்தை திரளாக இன்னொரு காலகட்டத்தை நோக்கி நகர்த்துவதே. மிதவாத தமிழ் தலைமைகளால் எது முடியுமென்பதற்கு, 1980களின் முன்னராக காலகட்டம் சாட்சியாக உள்ளது.
அதிகம் பேச்சு, கொஞ்சமும் செயலற்ற- இலக்கற்ற ஒரு அரசியல் பாதையிலேயே மிதவாத தலைமை செயற்பட்டது. அதன் வழியில் வந்திருந்தாலும், கடந்த பதினொரு ஆண்டுகளில், ஒரு இலக்கை நோக்கி விடாப்பிடியாக சம்பந்தன் செயற்பட்டிருந்தார். அவருடன் நெருக்கமாக பழகியவர்களிற்கு அது தெரியும். தனது காலத்தில் ஏதாவது ஒரு தீர்வை எட்டிவிட வேண்டுமென அவர் விரும்புகிறார்.
ஆனால், அவர் ஒரு சராசரி மிதவாத தமிழ் அரசியல்வாதி. மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் இருக்கும் பலவீனங்கள் அவருக்குமுள்ளது. சலுகைகள், பணம், அரச இரகசிய உறவுகள், டீல் என எல்லாமும் கலந்தததுதான், கடந்த பதினொரு ஆண்டு சம்பந்தன்.
தமிழ் அரசு கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர் அல்லாத போதும், அவர் திருகோணமலையில் தேர்தலில் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பேற்பட்ட அதிர்ஸ்டக்காரன். முன்னாள் எம்.பி தங்கத்துரையின் உயிரிழப்பு ஒரு துரதிஸ்டமென்றாலும், அது சம்பந்தனிற்கு அதிர்ஸ்டமானது. அந்த விவகாரத்தில் சம்பந்தனை இன்றும், தங்கத்துரையின் ஆதரவாளர்கள் குற்றம்சுமத்துகிறார்கள். விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையானதும் ஒரு அதிர்ஷ்டவசமான செயற்பாடே.
தமிழ் அரசியலில் துரதிஸ்டமான அரசியல்வாதிகளே அதிகமும் இருந்த நிலையில், அதிக அதிர்ஸ்டமுள்ள அரசியல்வாதியாக இருந்த ஒரேயொருவர் இரா.சம்பந்தன்தான். ஒரு மக்கள் தலைமை செயற்பாட்டு பாரம்பரியமில்லாத போதும், அந்த அதிர்ஷ்டம் அவரை தலைமையாக்கியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக, தனது காலத்தில் இனப்பிரச்சனை தீர்வை அவர் மனதார விரும்புகிறார் என்பது அவரது ப்ளஸ். ஆனால், கூட்டமைப்பை தனிநபர் சொத்தாக்கியது, “அண்டகிரவுண்டில்“ சில தலைகள் வசதி வாய்ப்பை பெறும் கலாச்சாரத்தை ஆரம்பித்தது, தொடர்வது, இந்த கலாச்சாரம் இருந்தாலே அர்ப்பணிப்பாக செயற்பட முடியாத நிலைமையை ஏற்படுத்தியது, தமிழ் சமூகத்தை அவரின் கீழிருந்தவர்கள் கூறுபோட அனுமதித்தது என ஏராளம் மைனஸ்கள் உள்ளன.
தமிழர்களை தலைமைதாங்கிய தலைமைகளில் மிக அதிக மைனஸ்களை கொண்ட தலைவர் இரா.சம்பந்தன் என்பதை எந்த தயக்கமுமின்றி சொல்லலாம். அவர் எல்லாக்காலத்திலும் அரசுகளிடம் சலுகைகளை பெற்ற அதேநேரம், அரசியல்ரீதியான எதிர்நிலை தோற்றப்பாட்டை பேணி, இரண்டு முக அரசியலை செய்து வந்தார். தமிழ் அரசியலில் இந்தவிதமாக வெற்றிகரமாக யாரும் செயற்பட்டதில்லை. ஆனந்தசங்கரியை தமிழ் சமூகம் ஒரேயடியாக ஒரு திசையில் ஒதுக்கியது. ஆனால், அப்படியொரு நிலையையை உருவாக்காமல் சூழலை வெற்றிகரமாக கையாண்டவர் சம்பந்தன்.
அதிக மைனஸ்களை கொண்ட தலைவர் என்ற போதும், இன்று அவரளவிற்கு ப்ளஸ் கொண்டவர்களாக வேறு தலைவர்கள் யாரும் உருவாக வில்லையென்பது தமிழ் சமூகத்தின் துரதிஸ்டம். இந்த ஒரு காரணமே, சம்பந்தன் தமிழர்களின் ஒரு பகுதியினரின் தலைவராக நீடிக்க காரணம்.
இடைமாறு காலகட்டத்தின் தலைவர்களில் அதிக ப்ளஸ் கொண்ட தலைவராக சம்பந்தன் இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில், அவர் தோல்வியடைந்த தலைவராகவே வரலாறு அவரை சொல்லும்.
கடந்த ஐந்தாண்டுதான் இரா.சம்பந்தன் தரப்பினரிற்கான காலமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றியடையவில்லை. வரலாற்று அனுபவங்களில் பாடம் கற்காமல், ரணில் என்ற தனி மனிதரில் ஆகப்பெரிய விசுவாசம் வைத்தது, இரா.சம்பந்தனையும் அவரது பரிவாரங்களையும் தோல்வியடைந்தவர்கள் ஆக்கியுள்ளது.
இப்பொழுது சம்பந்தன் பெருமளவு முடங்கி விட்டார். நடக்க, கேட்க, பேச சிரமப்படும் கட்டத்தை எட்டி விட்டார். இன்னும் ஓரிரு வருடங்களில், கருணாநிதியை போல அவரை வைத்து அழகுபார்க்கவே முடியும். அவரது செயற்பாட்டு காலம் முடிந்து விட்டது. அவரது காலத்தின் முடிவில், இன்னும் தமிழ் சமூகம் பல முனைகளில் சிதற தொடங்கியுள்ளது.
யுத்தத்தின் முடிவில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் மக்கள் திரளை அப்படியே, இன்னொரு தலைமையிடம் கையளிக்க முடியாத பலவீனமான தலைவராகவே, தமிழ் வரலாறு அவரை கொள்ளும்.