நடிகர் வடிவேல், அரசு பஸ்சை விலைக்குப் பேசும் காமெடி காட்சியைப் போல நிஜத்தில் சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் என்ற ஸ்டார் ஹோட்டலின் ஓனர், ஆடிட்டர், மேலாளர் என நடித்து 165 கோடி ரூபாய்க்கு விலை பேசிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு மேலாளராக பணியாற்றிவருபவர் மோகன்குமார்.
இவர், வடபழனி காவல் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “ இன்று (பிப்-2) காலை 8 மணியளவில் ஹோட்டல் லாபியில் 4 பேர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் தங்களுக்குள் சத்தமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். உடனே நான் ஹோட்டல் ஊழியர்களுடன் சென்று விசாரித்தேன். அப்போது, எங்களைப் பார்த்ததும் அவர்களில் ஒருவன் எழுந்து ஓடினான்
நான் உடனே ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் மற்ற மூன்று பேரையும் பிடித்து விசாரித்தேன்.
அப்போது அதில் ஒருவர், ஹோட்டலின் ஆடிட்டர் என்றும் தன்னுடைய பெயரை கருணாகரன் என்றும் கூறினார்.
மற்றொருவர் ஹோட்டலின் மேலாளர் பரமானந்தம் என்ற ஏஞ்சல் ஆனந்த் என்று தெரிவித்தார். இன்னொருவர் ஹோட்டலின் முதலாளி தட்சணாமூர்த்தி என்று அறிமுகம் செய்தார். அதைக்கேட்டு நானும் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தோம்.
ஆனால், அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, இந்த ஹோட்டலை 165 கோடி ரூபாய்க்கு விலைபேசிய தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேர் குறித்து காவல்துறைக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தேன். ஹோட்டலை விற்க முயன்ற கருணாகரன், பரமானந்தம், தட்சணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வடபழனி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் 3 பேர் மீதும் 419, 420, 511 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.
வடபழனி போலீஸார் கூறுகையில், “தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் கருணாகரன் (70), பரமானந்தம் (56), தட்சணாமூர்த்தி (65). இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கேரளாவில் உள்ள நிறுவனத்திடம் அம்பிகா எம்பயர் ஹோட்டலை விலைக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த நிறுவனமும் இந்த ஹோட்டலை விலைக்கு வாங்க சம்மதித்துள்ளது.
இதற்காக அந்த நிறுவனம் சார்பில் மேலாளர் மற்றும் சிலர் சென்னை வந்துள்ளனர். அவர்களை அதே ஹோட்டலில் அறையையும் வாடகைக்கு எடுத்து கருணாகரன் டீம் தங்க வைத்துள்ளது.
கேரளாவிலிருந்து சென்னை வந்தவர்கள் ஹோட்டலின் விவரங்களை மூன்று பேரிடமும் கேட்டுள்ளனர்.
பின்னர் ஹோட்டலில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர்தான் ஹோட்டலின் லாபியில் அமர்ந்து பேரம் பேசியுள்ளனர்.
அப்போதுதான் அதைக் கவனித்த மேலாளர் மோகன்ராஜ், எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்துள்ளோம். ஹோட்டலை விலைக்கு வாங்க சம்மதித்து சென்னை வந்த கேரளா நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மூன்று பேரும் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, தைரியமாக ஓனர், ஆடிட்டர், மேலாளர் என கேரளாவைச் சேர்ந்த நிறுவனத்திடம் நடித்துள்ளனர்.
ஹோட்டல் மேலாளர் மோகன்குமாரின் புகாரால் மோசடி நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடியது யாரென்று விசாரித்துவருகிறோம். மேலும், இவர்களின் பின்னணி குறித்த விசாரணையும் நடந்துவருகிறது” என்றனர்.
சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து அதே ஹோட்டலை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.