நேற்றைய தினம் கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்பப்பிரிவுக்கு புதுமுக மாணவர்களாக வரவிருப்போரை சிரேஸ்ட மாணவர்கள் தொலைபேசி மூலமாக பகிடிவதையில் ஈடுபடுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
தமிழர் விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ் சமூகத்தின் சார்பிலும் குரல் கொடுத்துவரும் ஓர் அடையாளமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது.
உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக கவனம் பெறும் இடமாக காலங்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இங்கே இடம்பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.
குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரிமையாளர்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும் யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.