கொரோனா வைரஸ் விவகாரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதால் பயணத் தடையை ஏற்படுத்த பிரித்தானிய அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வரும் நிலையில்,
பிரித்தானியா இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகள் சீனாவுக்கான விமான சேவையை தடை செய்துள்ளதுடன், சீனத்து பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியா உறுதியான முடிவெடுக்கும் முன்னரே ஈராக்கும் சவுதி அரேபியாவும் சீனர்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனிடையே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, பிரித்தானியா பயணத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொடர்பில் பிரித்தானிய நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு பொதுமக்களாலும் நிபுணர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே அடுத்த ஒரு வார காலத்திற்குள் பிரித்தானியாவும் பயணத் தடை விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 9 ஆசிய நாட்டவர்களில் எவரேனும் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்டால் அவர்கள் குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பு நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
சீனாவுக்கு விஜயம் செய்யாத ஒரு தொழிலதிபர் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மூன்றாவது நபர் என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் இந்த ஆலோசனையை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.