சுவிட்சர்லாந்தில் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையை தொடர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய நபரை நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மண்டலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் அந்த பாகிஸ்தான் நாட்டவர்.
இவரே தமது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 7 வயது சிறுமியை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியவர்.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த 2017 நவம்பர் மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையான அந்த பாகிஸ்தானியர், நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் அவரது மனுவை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவர் குறிப்பிட்ட காரணங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
மட்டுமின்றி அவரது குடியிருக்கும் உரிமையை பறிக்கவும் உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இவரது முதல் திருமணத்தில் பிறந்த இரு மகன்களையும் கவனிக்கும் பொருட்டு, சுவிட்சர்லாந்தில் குடியிருக்க தம்மை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரும் அவர்களது தாயாருடன் வசிப்பதாகவும், குறித்த பாகிஸ்தானியர் கடந்த 2003 முதல் இவர்களுடன் வசிப்பதில்லை எனவும் விசாரணையில் தெரியவந்தது.
பாகிஸ்தானியரை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையானது பொதுமக்கள் நலன் கருதியே என சுவிட்சர்லாந்தின் நிர்வாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.