ஆட்சியை எவ்வாறேனும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
கருத்து வெளியிடும் சுதந்திரத்தை மஹிந்த ராஜபக்ச துஸ்பிரயோகம் செய்கின்றார்.
நாடு எதிர்நோக்கி வரும் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் யதார்த்தமான விமர்சனங்களை வெளியிடாது, குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
நாட்டில் நிலவும் சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் முனைப்பு காட்டும் தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளியிடுவது ஜனநாயக அரசியலில் காணக்கூடிய ஓர் அங்கமாகும்.
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் காணப்படுகின்றது என்பதே இதன் மூலம் புலனாகின்றது.எனினும் சிலர் காரணிகளை ஆழமாக ஆராய்ந்து பார்க்காது விமர்சனங்களை வெளியிடுகின்றனர்.
மேலும் சிலர் தமக்கு எல்லாம் தெரியும் என்பதனை வெளிக்காட்டிக் கொள்ள வேறும் யாரேனும் எழுதிக்கொடுக்கும் விடயத்தை தமது பெயரில் வெளியிடும் நிலையைக் காண முடிகின்றது.
சிலர் தெரிந்து கொண்டே விமர்சனம் செய்கின்றனர், சிலர் எதனையும் புரிந்து கொள்ளாது விமர்சனம் செய்து தமது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர்.
மேற்குறிப்பிட்ட எந்தவொரு வகை கருத்து வெளிப்படுத்தல் என்றாலும் அது நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பானவை என்றால் யதார்த்ததை புரிந்து கொண்டு விமர்சனம் செய்யப்பட வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கருத்து வெளியிடப்படக் கூடாது.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கருத்து வெளியிடப்பட்டால் அதனை தேசத் துரோக செயலாகவே கருதப்பட வேண்டுமென ராஜித சேனாரட்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.