குருதி என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு உடல் திரவம் ஆகும்.
குருதியானது தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக குருதிச் சுற்றோட்டத்தொகுதி என அழைக்கப்படுகின்றது.
இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர்.
குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும்.
குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, குருதிச் சிறுதட்டுக்கள்) 1%.
மனிதரின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும்.
எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதிப்பெருக்கினால் குருதியிழப்பு ஏற்படும்போது அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.
குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புக்களும் துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.
குருதியிலுள்ள குருதி உயிரணுக்கள்
குருதியிலுள்ள திண்ம நிலையில் காணப்படும் உயிரணுக்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன. குருதிக்குச் செந்நிறம் தருவது செங்குருதியணுக்கள்.
ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு).
வெண்குருதியணுக்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். குருதிச் சிறுதட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.
குருதியில் பல வகைகள் உள்ளன. அவையாவன:
A
B
AB
O
Duffy
Lutheran
Bombay
MN system
குருதியின் தொழில்கள்
பதார்த்தக் கொண்டு செல்லல்
மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் சுவாச வாயுக்கள் (ஆக்சிசன், காபனீரொக்சைட்டு), போசணைப் பதார்த்தங்கள், கழிவுப்பொருட்கள், ஓமோன்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லல்.
வெப்பநிலைச் சீராக்கம்
உடலில் ஒரு பகுதியில் உருவாக்கப்படும் வெப்பத்தை உடல் முழுவதும் விநியோகித்து உடல் வெப்பநிலைச் சீராக்கத்தில் பங்கெடுக்கின்றது.
பாதுகாப்பு
வெண் குருதிக் கலங்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பாகமாக அமைந்து உடலை நுண்ணங்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றது.
தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வ