பிரேக் அப்பா? பசங்க உடனே தாடி வளர்த்து கையில் பாட்டிலோட கெட்ட வார்த்தைகள் புலம்பித் திரியணும், பொண்ணுங்க சோகமா மூலையில் முடங்கி அழுது தீர்க்கணும்; இதுதான் தமிழ் சினிமா புண்ணியத்தில் பிரேக் அப்பிற்கு பிந்தைய லைஃப் ஸ்டைலாகப் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. கல்வி, வேலை போல காதலும் ஒரு ப்ராசஸ்தான். எல்லாம் முடிந்தது என முடங்கிவிட அதில் ஒன்றுமே இல்லை. பிரேக் அப்பிற்குப் பின் செய்ய வேண்டிய விஷயங்கள் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதைச் செய்தாலே நீங்கள் பழைய ஃபார்மிற்கு வந்துவிடுவீர்கள். முயற்சி செய்துதான் பாருங்களேன்.
நோ சென்டிமென்ட்ஸ்:
பழைய விஷயங்களைக் கிண்டிக் கிச்சடி செய்வதில் இனி பலனே இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்கள் எக்ஸ் காதலனை/காதலியை எல்லா சோஷியல் மீடியாக்களிலும் ப்ளாக் செய்துவிடுங்கள். உங்கள் காதல் சம்பந்தமான பொருட்கள், பரிசுகளையும் நீங்கள் நார்மலாகும்வரை யாரிடமாவது கொடுத்துவைப்பது பெட்டர். ‘நாம ஏன் ஃப்ரெண்ட்ஸா இருக்கக் கூடாது?’ போன்ற முயற்சிகள் வேண்டாம். பிரேக் அப்பிற்கு பின்னான நட்புப் படலத்திற்கு எக்கச்சக்க மெச்சூரிட்டி தேவை. ரிஸ்க் எடுத்து பழைய நினைவுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள்.
ரெமோ டு இருமுகன்:
ஒரு கெட்டப் சேஞ்ச் உங்களுக்கு அளிக்கும் எனர்ஜியை எத்தனை டம்ளர் பூஸ்ட்டாலும் ஈடு செய்ய முடியாது. புது ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்ளுங்கள். ஷாப்பிங் சென்று பார்த்து வைத்திருந்த காஸ்ட்யூம்களை அள்ளி வந்துவிடுங்கள். உங்கள் வெளித்தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள்கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றலாம். கண்ணாடியில் பார்க்கும்போது இதைக் கட்டாயம் உணர்வீர்கள்.
வட்டத்திற்கு வெளியே:
உங்களுக்கு என ஒரு கம்ஃபர்ட் ஸோன் இருக்கும். அதை உடைத்து வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய, பயந்த சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். அது பாரா கிளைடிங் போன்ற அட்வென்ச்சராகவும் இருக்கலாம், மிட்நைட் பார்ட்டி போன்ற கலர்ஃபுல் அனுபவமாகவும் இருக்கலாம். அந்த அனுபவம் தரும் பரவசம் பழைய விஷயங்களை மறக்கடிக்கும்.
ஊர் சுற்றி:
எந்த விதக் காயத்திற்கும் சிறந்த மருந்து பயணம்தான். முடிந்த அளவு தனியாகச் செல்ல முயற்சி செய்யுங்கள். இதுவரை சென்றிராத இடமாக இருந்தால் பெட்டர். தனியாக இருக்கும்போது பழைய நினைவுகளை மூளை ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கும். அதைத் தடுக்க, முடிந்தவரை புது இடத்தோடு ஒன்றிவிடுங்கள். சும்மா உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சுகமே ஸ்பெஷல் ஜி!
வெளுத்துக்கட்டு:
சாப்பாடு போன்ற சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் இருக்கவே முடியாது. பற்றிப் படர்ந்திருக்கும் ஹோட்டல்களில் இதுவரை நீங்கள் டேஸ்ட் செய்திடாத மெனுவை தேடித் தேடிச் சாப்பிடுங்கள். கொஞ்ச நாளைக்கு இதை ஒரு வழக்கமாகவே வைத்திருங்கள். கொஞ்சம் செலவாகும்தான். ஆனால் பெஸ்ட் ஐடியா இது. சிறிது நாட்களிலேயே ‘பாய்ஸ்’ செந்தில் போல பெரிய டேட்டா பேஸ் உங்களுக்குள் உருவாகி இருக்கும். நாலெட்ஜ் இஸ் வெல்த்!
புத்தம் புது கமிட்மென்ட்:
அதற்குள் இன்னொரு கமிட்மென்ட்டா என எகிறாதீர்கள். லவ் மட்டுமே கமிட்மென்ட் இல்லை. தினமும் வொர்க் அவுட்டோ இல்லை அலுவலகத்தில் கூடுதல் பொறுப்போ ஏதோவொன்றை புதுப் பழக்கமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் உங்கள் ஸ்ட்ரெஸை குறைப்பதாக இருக்க வேண்டும். மண் லாரி போல ஓவர்லோடு ஏற்றினால் அப்புறம் மூளை தண்ணீர் இல்லாத டெல்டா மாவட்டம் போல ஆகிவிடும்.