திராவிட இயக்கத்தில் வேரூன்றிய வெற்றிகரமான ஒரு விழுது அ.தி.மு.க. தமது கட்சியின் தலைவரிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் உருவாக்கிய அக்கட்சி கிட்டத்தட்ட பொன்விழாவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
அத்தகைய மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 26 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து, கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்திய முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் சக்திமிக்க தலைவர் மறைந்து விட்டார்.
அ.தி.மு.க எனும் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்தை, கட்டிக்காக்க, தான் அடைந்த துயரங்களை கடந்த 1997-ம் ஆண்டு அ.தி.மு.க வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது, கட்சியின் வெள்ளிவிழா மலரில் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.
படிப்பவர் அனைவரது கண்களிலும் சில துளி கண்ணீரையாவது கடனாகப் பெற்று விடும் அந்த உருக்கமான கட்டுரை. அதனை இங்கு தருகிறோம்.
“அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். நிறுவி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. 1972 அக்டோபர் 17-ல் தொடங்கி, 1987 வரையில் ஒரு பதினைந்தாண்டு காலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொதுச்செயலாளராக இருந்து, கழகத்தை வழிநடத்தினார் ஜெயலலிதா.
தொடர்ந்து தலைவர் நிறுவிய இயக்கத்தைப் பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தும் வாய்ப்பை, கழக உடன்பிறப்புகள் எனக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் பெற்ற நற்பேறாகவே கருதுகிறேன்.
நினைவுபடுத்த விரும்பும் நிகழ்வுகள்!
கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கழகமும் சந்தித்த தடைகள், தடங்கல்கள் பலவற்றையும், அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து வீறுநடை போட்டு வந்த வரலாற்றைக் குறித்து என் நினைவில் நிற்கும் சில உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அண்ணாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கட்டிக்காக்க இயக்கம் தொடங்கிச் சிறப்புற நடத்திய தலைவருக்குப் பிறகு, இயக்கத்தைக் கட்டிக் காக்கவும், ஆட்சிக் கட்டிலில் ஏற்றவும் நான் சந்தித்த இடர்பாடுகளையும், இன்னல்களையும் ஒருவாறு இக்கட்டுரையில் ஆராயவும் முற்பட்டிருக்கிறேன்.
அன்னை இந்திரா காந்தி அவர்கள் தனக்குப் பிறகு ராஜீவ்காந்தி அவர்களை கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க இலகுவாக வழிவகுத்துப் போனார். ஆனால் எனது நிலையோ அப்படிப்பட்டது அல்ல.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு தலைமைப் பதவியை நான் எளிதாக அடையவில்லை. உள்ளும் புறமும் எனக்கெதிராகத் துரோகமும், பகை உணர்வுகளும் ஒரு சிலர் வளர்த்து விட்டதைப்போல அரசியலில் வேறொருவருக்கும் எதிராக உருவாக்கப்பட்டதில்லை. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிய நான் நடத்திய போராட்ட வரலாற்றையும் இதில் நினைவு கூர்ந்திட உள்ளேன்.
பிற்பட்ட மக்களுக்குக் கல்விச் சலுகையும், வேலை ஒதுக்கீடும் வேண்டுமென்ற கொள்கையை நிலைநிறுத்த 1916-ல் சர்.பிட்டி தியாகராயரும், டி.எம்.நாயரும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.
1925-ல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் முப்பதுகளில் நீதிக் கட்சியோடு இணைந்து செயலாற்ற முன்வந்தார். 1938 மற்றும் 1940-ல் பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
பின்னர், அண்ணாவின் உறுதுணையோடு 1944-ல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். 1949-ல் செப்டம்பர் 17-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். 1949-ல் இயக்கம் கண்டாலும் 1958-ல் தான் திருச்சியில் நடந்த கழக மாநாட்டில்தான் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்தலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற அண்ணா முடிவெடுத்தார்.
காரணம் 1953-ல் இயக்கத்தில் இணைந்த அண்ணாவின் இதயக்கனியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வருகையால், அன்றைய தி.மு.கழகம் ஓர் வெகுஜன இயக்கமாக உருவெடுக்க வாய்ப்புப் பெற்றமையே ஆகும்.
1967-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஈடுபாட்டோடு செயற்படுத்த தொடங்கினார். மக்கள் நல்லன்பைத் தனது ஆட்சித் திறன் மூலம் பெறத் தொடங்கிய அண்ணா அவர்களின் திடீர் மறைவு மக்களுக்குப் பேரிழப்பாக அமைந்தது.
1969-ல் அண்ணாவுக்குப் பின் அண்ணாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டு எல்லா நிலைகளிலும் தனிமனிதர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆதிக்க மனப்பான்மை உருவானது.
1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பெற்ற இடங்களைவிட 1971 சட்டமன்றத் தேர்தலில் 45 இடங்கள் அதிகம் கிடைத்தது. அந்தக் கூடுதலான இடங்கள், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் செல்வாக்கினால் பெற்றவை என்பதை தலைமை மறந்து விட்டது.
அண்ணாவின் உண்மைத் தம்பிகள் புறக்கணிக்கப்பட்டனர், அண்ணாவின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் ஒருவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உதாசீனப்படுத்தப்பட்டார்.
அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பட்ட சிலரின் குடும்பச் சொத்தாக மாறுவதை மக்கள் விரும்பவில்லை. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் மனங்கொதித்தார்கள். அண்ணாவின் கொள்கைகளைக் கட்டிக் காக்க எம்.ஜி.ஆர். உறுதிகொண்டார்.
கழகத்தின் வரவு, செலவுக் கணக்கைக் கேட்டார். எம்.ஜி.ஆர். எழுப்பிய போர்க்குரல் பொதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் ஆதரவு வளர்வது பிடிக்காமல், அவர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
1972-ல் தொடங்கி எண்ணற்ற வழக்குகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீதும், கழக உடன்பிறப்புகள் மீதும் தொடுத்து, அப்போதுதான் அரும்பிய இயக்கத்தைத் துவண்டுவிடச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அடக்கு முறைகளை எதிர்த்து நின்று, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரு வெற்றிபெற்று அண்ணாவின் உண்மையான இயக்கம் தனது தலைமையில் இயங்குவதுதான் என்பதை நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர்.
மூன்று முறை (1977, 1980, 1984) தேர்தல்களில் நின்று வெற்றிபெற்ற முதலமைச்சர் என்று நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை உற்பத்தி செய்த அமுதசுரபியாக விளங்கினார். 1982-ம் ஆண்டு ஜூலை முதல் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
புரட்சித்தலைவர் ஆணைக்கிணங்க, 4.6.1982 அன்று கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைப் பொதுத்தொண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஈடுபடுத்தினார். என்னை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கி அகம் மகிழ்ந்தார்.
சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் செல்லும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்னைச் சந்திப்பார்கள், அவர்கள் மூலம் ஆட்சி நிலவரம் குறித்து அறிந்து கொள்வேன், கழக முன்னணியினர் சந்திப்பார்கள்.
அவர்கள் மூலம் கழகப் பணிகள் குறித்து அறிந்து, பொதுமக்கள் கோரிக்கைகளையும் பெற்றுக் கொள்வேன்.
சென்னை திரும்பியதும் கட்சியிலும், ஆட்சியிலும் நிகழ்த்த வேண்டிய பணிகள் குறித்து புரட்சித்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன், அவற்றை ஏற்றுக்கொண்டு, புரட்சித்தலைவர் உடனடியாக அமல்படுத்தினார், நடவடிக்கை மேற்கொண்டார்.
1982-ல் நடைபெற்ற கடலூர் மாநாட்டில் என்னை ‘பெண்ணின் பெருமை’ என்ற சீரிய தலைப்பில் பேசச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அரசியல் அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர்.
1983-ம் ஆணடு ஜனவரி திங்கள் 28-ஆம் நாள், எம்.ஜி.ஆர்., என்னை கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்தார். அப்போது நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்தான் புரட்சித்தலைவர் முதன்முதலாக என்னை நேரிடையாக ஈடுபடுத்தினார். திருச்செந்தூர் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கப் பணித்தார்.
திருச்செந்தூர் கோயில் அலுவலர் சுப்பிரமணியப் பிள்ளை சாவு குறித்து எதிர்கட்சிகள் பெரும் போராட்டமே நடத்தி முடித்திருந்தன. ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்று கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை சென்று, சுப்பிரமணிய பிள்ளை படுகொலை குறித்து பெரும் கொந்தளிப்பே ஏற்படுத்தி வைத்திருந்தார்.
‘வைரவேல் திருடனென்று’ ஒரு அமைச்சரைக் குற்றம்சாட்டி சுப்பிரமணியப் பிள்ளை சாவில் தொடர்புபடுத்தி பெரும் அமர்க்களமே படுத்தினார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. தொகுதி மக்களும் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவரிடம் அந்த அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரை அனுப்பாதீர்கள்!’ என்றும் ‘அம்மாவை (என்னை) அனுப்பி வையுங்கள்! என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த அமைச்சர் தொகுதிப் பக்கமே தலைக்காட்டி விடக்கூடாது எனப் புரட்சித்தலைவரே உத்தரவிட்டிருந்தார்.
புரட்சித்தலைவர் ஆணையைச் சிரமேற்கொண்டு இரவு பகலாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன், போகுமிடமெல்லாம் மக்கள் பேராதரவு தந்தார்கள். புரட்சித்தலைவரோடு இணைந்து பிரச்சாரம் செய்தேன், கழகம் வெற்றிவாகை சூடியது.
தினமும் காலை பத்துமணிக்கு தலைமைக் கழகம் வருகை தந்து, கழகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டேன், கழகப் பிரச்சாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் கட்டாயம் கழகப் பொதுக்கூட்டங்களில் பங்குபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
கழகப் பணி என்று வரும்போது யார் அலட்சியம் காட்டினாலும் நான் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தலைமைக் கழகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள், அவர்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன்.
தலைமைக் கழகத்திற்குச் சென்றால் கொள்கை பரப்புச் செயலாளரைக் கண்டு, தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல முடியும் என்ற நிலையினை உருவாக்கியது தொண்டர்களுக்கு மன நிறைவைத் தந்தது.
கழகப் பணியிலும், ஆட்சிப் பணியிலும் கழகத் தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவருக்கும் இணைப்புப் பாலமாக நின்று, தொண்டர்களின் உணர்வுகளைத் தலைவருக்குத் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான பணிகள் நிகழ என்னால் முடிந்ததை உளத்தூய்மையோடு செய்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்
இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 23.4.1984-ல் புரட்சித்தலைவர் என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே இருக்கை எண் 185 எனக்கு ஒதுக்கப்பட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாத கிடைத்ததற்கரிய பேறாகவே கருதுகிறேன்.
நாடே வியக்கும்வகையில் அண்ணா முழங்கிய அதே இருக்கையில் நின்று, மாநிலங்களவையில் மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட மசோதா குறித்த விவாதத்தில் எனது உரையை முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்தேன். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்மீது பேரன்பு காட்டினார். எனது நடவடிக்கைகளில் சிலர் அதிர்ந்து போனார்கள்.
தலைவருக்கு ஏற்பட்ட இக்கட்டைச் சமாளிக்க நான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலக எடுத்த முடிவை, தலைவரும தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், நான் பதவி விலகிய பின்னரும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை.
1984-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாள் தலைவரின் உடல் நலம் குறைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 13-ம் திகதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்ற வேதனைச் செய்தியால் தமிழ்நாடே துயரத்தில் வீழ்ந்தது.
5.11.1984-ல் தலைவர், அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோவில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து, என் கண்கள் குளமாயின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த இருவரில் இந்திரா காந்தி மறைந்தார். தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார்.
1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கழகம் கூட்டணி சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார்.
ஆண்டிப்பட்டியில் எனது பிரச்சாரத்தைத் தொடங்கினேன். போகும் இடமெல்லாம் என்னை ஆரவாரத்தோடு மக்கள் வரவேற்றார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்ப் புகார்களுக்கு ஆங்காங்கே பதிலுரைத்தேன். ‘புரட்சித் தலைவர் திரும்ப வருவார், பூரண நலம் பெற்று வருவார், நல்லாட்சி தருவார், என ஆணித்தரமாக எடுத்துரைத்தேன், ‘புரட்சித்தலைவரை மீண்டும் முதல்வராக்கி வரவேற்றிட நல்லாதரவு தாருங்கள்’ என சென்ற இடமெல்லாம் வேண்டுகோள் வைத்தேன்.
பொதுமக்கள் எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இயக்கம் காப்பதற்குத் துணை நின்றதிலும் கழகம் பெற்றிபெற பிரச்சாரம் செய்ததிலும் நான் மிகுந்த மனநிறைவு பெற்றேன். ‘தலைவர் தமிழ்நாட்டில் இல்லாத குறையை அம்மா தீர்த்து வைத்தார்கள்’ என்று பலரும் சொன்னதை என் காது குளிரக் கேட்டேன்.
1985 பிப்ரவரித் திங்கள் 12-ஆம் நாள் புரட்சித்தலைவர் தாயகம் திரும்பினார். செப்டம்பர் ஆறாம் நாள் மீண்டும் என்னைக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். 1986 ஜுலை 14, 15-இல் மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடத்த ஆணையிட்டார். மாபெரும் மன்றப் பேரணியை தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் புரட்சித்தலைவர் எனக்கு அளித்தார்.
மாநாட்டில் முத்தாய்ப்பாக புரட்சித்தலைவருக்கு ஆறடி உயர வெள்ளிச் செங்கோல் ஒன்றினை தலைமைக் கழகத்தின் சார்பில், அவரிடம் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். செங்கோலினைப் தலைவர் கரங்களில் அளித்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
அந்த வெள்ளிச் செங்கோலை புரட்சித் தலைவர் என்னிடமே திருப்பி அளித்த போது மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் அச்செய்கையை வரவேற்றுச் செய்த கரவொலி இன்றும் என் உள்ளத்தில் பசுமை மாறாத மகிழ்ச்சி நினைவாக உள்ளது.
அந்நிகழ்ச்சியினைத் தான் தமிழ்நாட்டு மக்கள் தனக்குப் பின் தான் வகித்த பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டியது யார் எனப் புரட்சித்தலைவர் அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக கருதினர். 1986 செப்டம்பரில் தலைவர் உடல் நலம் மீண்டும் சீர்கெட்டது.
எதிர்பாராத நேரத்தில் தமிழக ஒளிவிளக்கு அணைந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24-ம் நாள் மறைந்தார். தலைவர் மறைந்த துயரச் செய்தி என் காதுகளில் பேரிடியாக விழுந்தது.
இராமாவரம் தோட்டத்தில் தலைவர் திருமுகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இராஜாஜி மண்டபத்தில் தலைவர் திருவுடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் தலைவர் தலைமாட்டிலேயே நின்றிருந்தேன். தலைவர் மறைவில் தளர்ந்து போன என் மீது இராஜாஜி மண்டபத்தில் பழிச் சொற்கள் என்னும் தேள் கொண்டு கொட்டினார்கள், இராணுவ வண்டியில் ஏறிய என்னை பிடித்திழுத்து கீழே தள்ளியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
என் உள்ளத்தில் புதிய உறுதிப்பாடு பூத்தது. கழக வரலாற்றில் ஓர் புத்தெழுச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறுவிய இயக்கத்தையும் கழகத் தொண்டர்களையும் காப்பாற்ற எந்தத் தொல்லையையும் எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதென்று முடிவெடுத்தேன்.
‘தற்காலிக முதல்வரான நாவலர் அந்தப் பொறுப்பில் தொடரட்டும், புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அப்படியே நீடிக்கட்டும், கட்சியில் யார், யார், எந்ததெந்தப் பொறுப்புகள் வகித்தனரோ அதே பொறுப்புகளில் அவர்களும் இருக்கட்டும்’ என்று தலைவர் நிறுவிய இயக்கத்தைக் கட்டிக்காக்க முயன்ற என் முயற்சியைக் கழகத்தில் சிலர் ஏற்கவில்லை.
1987 டிசம்பர் 31-ஆம் நாள் நாவலர் முதலான மூத்த தலைவர்கள் கூடி முடிவு எடுத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக நான் பெறுப்பேற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் நள்ளிரவு 12 மணிக்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப்பட்டேன்.
அதே வேகத்தோடு 1988 ஜனவரி முதல் நாள் காலையில் தலைமைக் கழகத்தில் கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என் பெயரை பொதுச்செயலாளர் என முடிவெடுத்து அறிவித்தனர்.
1988 ஜனவரி இரண்டாம் நாள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். கவர்னர் குரானா, ஜானகி அம்மையாரை அமைச்சரவை அமைக்க அழைத்தார், ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில் தான் என்னையும் கழக நிர்வாகிகளையும் தலைமைக் கழகத்தை விட்டு வெளியேற்றி தலைமைக் கழகம் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது.
தலைமைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய என்னைக் கைது செய்து வேனில் ஏற்றினார்கள், சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்ததற்கு நேர்மாறாக என் இல்லத்திலே கொண்டு வந்து விட்டு விட்டு காவல் துறையினர் சென்றனர். புரட்சித்தலைவர் இயக்கத்தைக் காக்க நான் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘நால்வர் அணி’ என்ற பெயரில் சிலர் நம்மிடமிருந்து பிரிந்தனர்.
பூட்டிச் சீல் வைக்கப்பட்ட தலைமைக் கழகம் என் தலைமையில் அமைந்த கழகத்துக்கே சொந்தமென்ற தீர்ப்பு கிடைததது. தொண்டர்களிடம் புதிய உற்சாகம் பிறந்தது. தமிழ்நாட்டில் 1989-ம் ஆண்டு தேர்தலில், நான்கு முனைப் போட்டி நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நான் மக்களைச் சந்தித்து வந்த நிலையில், போடி நாயக்கனூரில் வெற்றி பெற்ற எனக்குப் பொது மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிரக்கட்சித் தலைவரான முதல் பெண் என்ற பெருமையைத் தந்தார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுப் பொலிவு பெற்றது. 1989-ல் இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமான முறையில் இணைந்து விட்டதால் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு பெண்ணென்றும் பாராமல் என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்.
‘என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, இனிமேல் இந்த ஆட்சி கலைக்கப்பட்ட பின்னால் தான் சட்டமன்றத்திற்கு வருவேன், அதுவும் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று சபதம் செய்து வெளியேறினேன்.
1989 நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு. கழகத்திற்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் கழகக் கூட்டணி போட்டியிட்ட பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39-ஐ வென்றது. என்னைக் கொல்ல மேற்கொண்ட சதி வெற்றிபெறவில்லை.
ராஜீவ்காந்தி படுகொலையால் மே 24-ஆம் நாள் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் ஜுன் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பெற்றது. மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கழகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்தது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இலட்சியத்தையும் கட்சியையும் கட்டிக்க காக்க என் மீது பகைவர்களும், ஏன்? சில நேரங்களில் கழகத்திலிருந்து வெளியேறியவர்களும் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொண்டுள்ளேன்.
ஜானகி அம்மையார் அணி என்றும், ‘நால்வர் அணி’ என்றும் ‘எம்.ஜி.ஆர். முனனேற்றக் கழகம்’ என்றும், ‘போட்டி அண்ணா தி.மு.க.’ என்றும் வேறுபட்டவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் திரும்பிக் கழகத்தில் இணைய விரும்பிய போது இன்று வரை பெரிய உள்ளத்தோடு நடந்து கொண்டுள்ளேன் என்பது கழக வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும்.