மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை நவீன முறையில் ‘அம்மா நினைவிடம்’ என புதுப்பிக்க உள்ளதாகவும், இதற்கான மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மாதிரி வரைபடம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த மாதிரி வரைபடத்தில் நினைவிடத்தின் முன்புறம் மிகப்பெரிய தூண்களுடன், கிரீடம் போன்ற அமைப்பில் முகப்பு அமைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் இருபுறமும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் புற்களால் அலங்கரிக்கப்படும்.
இதையடுத்து மத்தியில் இரண்டு கைகள் ஒன்று சேர்ந்திருக்கும் வகையில் பிரம்மாண்ட அமைப்பு வைக்கப்படுகிறது. சமாதி அமைந்துள்ள இடத்தில் தேவதை சிலை ஒன்றும், மேல்புறம் கிரீடம் போன்றும் உருவாக்கப்பட உள்ளது. அவருடைய சமாதியில் “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்படும்.