பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியதாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்றவை உலகின் எங்காவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த குற்றங்களுக்கு சில நாடுகளில் கடுமையான தண்டனைகள் உள்ளன. ஒரு சில நாடுகளில் சிறை தண்டனை போன்றவை மட்டுமே உள்ளன. பெரும்பாலானோரின் விருப்பம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை தான் தீர்வு என்று கூறி வருகின்றனர்.
அந்த வகையில், சமீபகாலமாக பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காக அது தொடர்பான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அப்போது புதிய சட்ட திருத்தம் தொடர்பாக பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தச் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.