இந்த நவீன உலகத்தில் பொருளை ஈட்டுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் மன அமைதியுடன் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் பலரும் போராட வேண்டியதிருக்கிறது. அத்தகைய மன அமைதியும், நிம்மதியும் இறையரு ளால் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்றாகும். அந்த வகையில் பக்தர்கள் நினைத்த மாத்திரத்திலேயே நிம்மதியையும், முக்தியையும் தரும் திருத்தலமாக விளங்குகிறது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்.
இந்த திருத்தலத்தில் இருக்கும் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. ஆம்! இங்கு ஈசன் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவர் மலையாக மாறியதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஒரு முறை காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கும், படைப்புக் கடவுளான பிரம்மதேவருக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. அந்த போட்டி, அவர் களுக்கிடையே வாக்குவாதத்தை வளர்த்தது.
‘என்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து பிறந்த நீ எப்படி என்னை விட பெரியவனாவாய்?’ என்பது மகாவிஷ்ணுவின் வாதம். ‘நான் தான் படைப்புக் கடவுள், நான் உலக உயிர்களை படைக்காவிட்டால், காக்கும் கடவுளான உங்களுக்கு வேலையே இல்லை. எனவே நான்தான் பெரியவன்’ என்பது பிரம்மனின் வாதம்.
இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்ததே தவிர சரியான தீர்ப்பு சொல்லத்தான் ஆள் இல்லை. சிவபெருமானே தீர்ப்பு வழங்குபவராக வந்தார். ‘நான் அக்னி ஜுவாலையாக உயர்ந்து நிற்பேன். என்னுடைய திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவர்களே பெரியவர் என்று முடிவு செய்யப்படும்’ என்று போட்டிக்கான விதியைக் கூறினார்.
இருவரும் ஒப்புக்கொண்டனர். மகாவிஷ்ணு திருவடியைத் தேடி செல்வதாகவும், பிரம்மதேவர் திருமுடியைத் தேடிச் செல்வதாகவும் முடிவு செய்யப்பட்டது. திருவடியைக் காண வராக அவதாரம் எடுத்த விஷ்ணு, பூமியை குடைந்தபடி வேகமாக முன்னேறிச் சென்றார். பிரம்மனோ அன்னப்பறவை வடிவெடுத்து, வானத்தை நோக்கி பறந்து சென்றார். ஆண்டுகள் பல கடந்தும், இருவராலும் இலக்கை மட்டும் அடையமுடியவில்லை.
பல நூறு ஆண்டுகளாகி விட்டது. தன்னால் முடியவில்லை என்று சிவபெருமானிடம் வந்து தோல்வியை ஒப்புக்கொண்டார் மகாவிஷ்ணு. பிரம்மனும் திரும்பிவிடும் எண்ணத்தில் இருந்தபோது, மேல் இருந்து ஒரு தாழம்பூ வந்தது. அதை இடைமறித்த பிரம்மதேவன், ‘எங்கிருந்து வருகிறாய்?’ என்றார்.
தாழம்பூ, ‘நான் சிவபெருமானின் திருமுடியில் இருந்து வருகிறேன். பல நூறு ஆண்டுகளாக அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது.
இதனால் அயர்ச்சி அடைந்த பிரம்மதேவர், ‘தாழம்பூவே! எனக்காக நீ ஒரு பொய் சொல்ல வேண்டும். நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக, ஈசனிடமும், மகாவிஷ்ணுவிடமும் கூறவேண்டும்’ என்றார்.
முதலில் மறுத்த தாழம்பூ, பின்னர் ஒப்புக்கொண்டது. தாழம்பூவுடன் பூமிக்கு வந்த பிரம்மதேவர், ‘நான் ஈசனின் திருமுடியை கண்டுவிட்டேன்’ என்று ஆனந்தக்கூச்சலிட்டார்.
மகாவிஷ்ணு, ‘உண்மையாகவா?’ என்றார்.
‘ஆமாம். அதற்கு சாட்சியாக இந்த தாழம்பூவை, ஈசனின் திருமுடியில் இருந்து எடுத்து வந்தேன்’ என்றார் பிரம்மதேவர். தாழம்பூவும் ‘ஆமாம்’ என்று பொய் சாட்சி சொன்னது.
அப்போது சிவபெருமான் கண்களில் நெருப்பு பறக்க பிரம்மதேவரை நோக்கி, ‘என் திருமுடியை கண்டதாக பொய் கூறிய உமக்கு இனிமேல் பூலோகத்தில் ஆலய வழிபாடே இருக்காது. உமக்கு பொய் சாட்சி கூறிய தாழம்பூவை என் பூஜைகளில் நான் ஏற்க மாட்டேன்’ என்று சாபம் கொடுத்தார். இதனால் பிரம்மதேவரும், தாழம்பூவும் அதிர்ச்சி யடைந்தனர்.
ஈசனின் வாக்குப்படி பூலோகத்தில் பிரம்மதேவருக்கு என்று தனிக்கோவில்கள் இல்லாமல் போயிற்று. சிவபெருமானின் பூஜையில் தாழம்பூவுக்கும் இடம் கிடையாது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.
சிவபெருமான் அடி முடி காண முடியாத அக்னி ஜோதியாக நின்ற தினம், கார்த்திகை தீபத் திருநாளாகும். இந்த திருவிளையாடல் நடந்த இடம் திருவண்ணாமலை திருத்தலமாகும். இதை நினைவு கூறும் வகையில்தான் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.