சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையானது வெகுவாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால் முதல்வர் பதவியில் இருக்கும்போதே சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டார். இந்த சிறைத்தண்டனை தான் ஜெயலலிதாவை மனதளவில் மிகவும் பாதித்து, உடல் நிலையை மிகவும் மோசமாக்கியது.
மேலும், ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். இது அரசியல் வட்டாரங்கள் கூறும் தகவல்.
கடந்த 2015ம் ஆண்டு மே 11ம் திகதி, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகியே வந்துள்ளது.
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, முதல்வராக 6வது முறையாக பதவியேற்று கொண்ட போது முக்கிய முடிவுகளை எடுக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனை அருகில் வைத்துக் கொண்டார்.
கடந்த செப்டம்பர் 20ம் திகதி ஜெயலலிதா, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பங்கேற்றார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலமே இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவின்போதே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகதான் இருந்துள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அடுத்த 2வது நாள் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு நீண்ட காலமாக பாதுகாவலராக பணியாற்றிய சீனியர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஒரு சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் ஒருநாள் கோட்டைக்கு ஜெயலலிதா காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென்று காரை நிறுத்தச் சொன்ன அவர், உடனே வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளார். அவர் காருக்குள்ளேயே மயக்கமடையும் நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக வண்டியை திருப்பி போயஸ் கார்டனுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெயலலிதா 4 மணி நேரம் ஓய்வெடுத்த பின்னரே மீண்டும் கோட்டைக்குத் திரும்பியுள்ளார்.
பெங்களூரு சிறைவாசத்துக்குப் பிறகு தான் ஜெயலலிதா மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டது கூட அவரை மனதளவில் உற்சாகப்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ஜெயலலிதா தனது உடல்நிலையில் அக்கறைக் காட்டத் தவறியதும் அவரது உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.