சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினையைக் கூர்மைப்படுத்துவதற்கும், அதனை கொதிநிலைக்கு இட்டுச் செல்வதற்கும் யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பவம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை.
வட பகுதி மக்கள் யாழ்ப்பாண நூலகத்தை தங்களது- இதயமாகவும் உயிர்நாடியாகவும் கூடக் கருதினர். அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக இந்நூலகம் விளங்கியது.
1933ஆம் ஆண்டு முதல் கட்டியெழுப்பப்பட்டு வந்த இந்நூலகம், முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த சொற்ப காலத்தில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் அது முழு நூலகமானது.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும், தனிப்பட்டவர்களிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட பல நூல்கள், குறிப்பாக பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் 1800 களில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டில் அல்பிரட் துரையப்பாவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு சமய, கலாசார, அறிவியல், பொருளாதார, அரசியல் நூல்கள் உட்பட பல்வேறு தலைப்புகளிலும் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இதன் ஊடாக வடபகுதி மக்களின் சமூக கல்வி அறிவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இந்நூலகம் ,அம்மக்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் பின்னிப் பிணைந்ததாகவும் திகழ்ந்தது.
இவ்வாறு வடபகுதி மக்களின் மேம்பாட்டுக்கு அளப்பரிய பங்களிப்பு நல்கி வந்த இந்நூலகம், தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.
இவ்வாறான சூழலில் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் விளைவாக அன்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னர் அதாவது முதலாம் திகதி இந்நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அன்று ஆட்சியிலிருந்த போதே இந்த துரதிர்ஷ்டகர நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. இதனால் இந்நூலகத்திலிருந்த சுமார் 97 ஆயிரம் நூல்கள் எரிந்து சாம்பலாகின.
இதன் விளைவாக கொதிநிலையில் இருந்து வந்த இனப்பிரச்சினை கூர்மை அடைவதற்கு வழிவகுத்தது. இந்நூலக எரிப்போடு தாம் எல்லாவற்றையுமே இழந்து விட்டதாகவே வடபகுதி மக்கள் கருதினர்.
இந்நூலக அழிப்பு நடவடிக்கை வடபகுதி தமிழ் மக்களின் மனங்களின் அழியா வடுக்களாக இடம்பிடித்தன.
குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைவதற்கும், அப்போராட்டம் சுமார் மூன்று தசாப்த காலம் நீடிப்பதற்கும் இந்த துரதிர்ஷ்டகர சம்பவமும் பெரிதும் துணைபுரிந்துள்ளது.
இவ்வாறு இந்நாட்டு இனப்பிரச்சினையில் அழியாத் தடம் பதித்து பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்நூலக எரிப்பு சம்பவம், அன்றைய ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதால் அதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
அதாவது சிறைச்சாைலகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அன்றைய (1981) ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாம் மன்னிப்புக் கோருவதாகக் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த மன்னிப்பு கோரல் நாட்டில் அமைதி சமாதானத்தை உண்மையாக விரும்பும் அனைத்து தரப்பி-னராலும் வரவேற்கப்படும் ஒன்றாகும்.
அதேநேரம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் அதிகரிப்பதற்கும் வலுவடைவதற்கும் இந்த மன்னிப்புக் கோரலும் பெரிதும் துணை புரியும்.
2015ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு- பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் வாழும் எல்லா மக்கள் மத்தியிலும் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக வெளிப்படைத் தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரங்கமாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையிலான வேலைத்திட்டங்களும் அடங்கியுள்ளன.
அந்த வகையில் வடக்கிலும் கிழக்கிலும் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் திரும்பவும் உரிமையாளர்களிடம் கட்டம் கட்டமாகக் கையளிக்கப்பட்டு வருகின்றன.
சுமார் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தம் காணி உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆட்சியுரிமைச் சட்ட ஏற்பாட்டையும் பாராளுமன்றத்தின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் சக வாழ்வையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி வளமான சுபீட்சமான நாடாக இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் பரந்தடிப்படையில் முன்னெடுத்துள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக இந்நாட்டில் நிலைபேறான அமைதி சமாதானத்தை மாத்திரமல்லாமல் பொரு-ளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்விடயத்தில் மிகத் தெளிவுடன் செயற்பட்டு வருவதால் தான் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இவ்வாறான சூழலில் யாழ் நூலக எரிப்புக்கு பிரதமரின் மன்னிப்புக் கோரல் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வழிவகுக்கும்.