தலைவர்களின் இறப்பு, கைது என்றால் தமிழகத்தில் கலவரங்களும், பேருந்துகளும், வாகனங்களும் எரிக்கப்படுவதும், கடைகள் உடைக்கப்படுவதும், வன்முறைகள் வெடிப்பதும் தான் தமிழகம் என்று ஒரு காலம் இருந்தது.
திரைப்படங்களும் இதனை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால், நேற்றைய தினம் அதனை மாற்றியிருக்கிறார்கள் தமிழக மக்களும் இளைஞர்களும்.
நேற்று முந்தினம் இரவு 11.58 இற்கு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்டது.
அந்தச் செய்தி வெளியான நேரத்தில் இருந்து தமிழகத்தில் ஒருவகையான அமைதியும், சோகமும் படறத்தொடங்கியிருந்தது.
நகரங்களின் சில பகுதிகளில் மட்டும் தான் காவல்த்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.
ஜெயலலிதாவின் இறப்புச் செய்தி வெளியிட்டால் நாட்டில் வன்முறை வெடிக்கும், கலவரங்கள் உண்டாகும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
முன்னெச்சரிக்கையாக துணை இராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் வெடிக்கலாம் என்று கருதினர். குறிப்பாக சென்னையில் வன்முறை வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
ஆனால், இவர்கள் நினைத்ததற்கு மாறாக நடந்ததோ வேறொன்று. நேற்றைய தினம் அதாவது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடந்த தினமன்று தமிழகம் அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது.
வன்முறைகளோ, கலவரங்களோ வெடிக்கவில்லை. மாறாக, தமது தலைவிக்கு, தம் முதல்வருக்கு, தம் அம்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த எல்லோருமே ஒன்று திரண்டனர் மெரீனா பீச்சிற்கு.
காவல்த்துறையினர் இரவு பகல் பார்க்காது தங்கள் கடமையினைச் செய்து முடித்தனர்.
வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலை ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வின் போது நிகழ்ந்ததை அனைவரும் வியப்பாக பார்க்கின்றார்கள்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சென்னைவாசி ஒருவர், இன்றைய இந்த அமைதி தமிழக மக்கள் அம்மாவின் சேவைக்கு, ஜெயலலிதாவின் ஆட்சிக்கு, செய்யும் நன்றிக்கடன்.
பொலிஸார் இன்று தங்கள் கடமையினை சரியாக செய்திருக்கின்றார்கள். இதுவும் அம்மாவிற்கான கௌரவம். ஏனெனில் பொலிஸ் அதிகார இலாக்கா அம்மாவினுடையது.
இதனால் தான் இன்று அமைதிப் பூங்காவாக தமிழகம் காட்சியளிக்கின்றது என்றார்.
உண்மையில் ஜெயலலிதாவும் இதைத்தான் விரும்பியிருப்பார். தமிழகம் அமைதியான வழியில் இருக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்திருக்கக் கூடும். அதனை தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு செலுத்தும் மரியாதையாக. கடமையாகச் செய்து முடித்திருக்கின்றனர்.
தொடரட்டும் தமிழகத்தின் அமைதியான சூழல்.