கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி 17 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளான சிறுமிகள் இருவர், நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளனர். 17 வயதுடைய சிறுமிக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
குறித்த சிறுமி, சிறுமியின் கணவர் மற்றும் சிறுமியின் சகோதரி, மற்றொருவர் என நால்வர் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு சிறிய மீன்பிடிப் படகொன்றில் குளத்தை சுற்றி பார்வையிட்ட பின்னர் குளக்கரையில் அமர்திருந்துள்ளனர்.
இதன்போது, சிறுமியின் கணவரும் மற்றைய ஒருவரும் சிறுமிகளை விட்டு விலகி சற்றுத் தூரம் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது சிறுமிகள் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
மூழ்கிய சிறுமிகளை மீட்டு, அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.