பிரபல அமெரிக்க ஏடான ‘டைம்’, ஒவ்வொரு ஆண்டும், செய்திகளில் அதிகளவில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்துகிற உலக பிரசித்தி பெற்ற அரசியல்வாதிகள், கலைஞர்கள், வீரர்கள், தொழில் அதிபர்களில் இருந்து அந்த ஆண்டின் சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து அட்டையில் வெளியிட்டு கவுரவம் அளித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் இறுதி தேர்வு பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர் நைஜல் பாரேஜ், அமெரிக்க பாடகி பியான்ஸ், ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் இணையதள வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அபார வெற்றி பெற்றார்.
ஆனால் ‘டைம்’ ஏட்டின் ஆசிரியர்கள், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டின் சிறந்த மனிதர்’ என அறிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் என ‘டைம்’ புகழாரம் சூட்டி உள்ளது.
இந்த தேர்வு குறித்து டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இது மிகப்பெரிய கவுரவம். இது மிகுந்த அர்த்தம் கொண்டது. டைம் ஏட்டின் அட்டையில் இடம் பெறப்போவது அதிர்ஷ்டம்” என கூறினார்.