ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ…’ – தமிழில் இப்படியொரு சொலவடை உண்டு. சாலையோரங்களிலும் வெட்ட வெளிகளிலும் பூத்துக் கிடக்கும் இந்த ஆவாரம்பூவை ஒரு கற்ப மூலிகையாகவும் சொல்கிறார்கள். ஆவாரம்பூவில் தங்கச் சத்து உள்ளது என்பதால் அது தங்கத்துக்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெறக்கூடியது.
மஞ்சள் நிறமுடைய அழகிய குறுஞ்செடியான இந்த ஆவாரம்பூ, சர்க்கரை நோய்க்கு நல்லதொரு மருந்தாகும். மாலைவேளைகளில் பாலில் ஆவாரம்பூவைப் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
ஆவாரம்பூ துவையல், சட்னி, ஆவாரம்பூ சாம்பார் என பல வடிவங்களில் செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூவை வெறுமனே மையாக அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசையாக செய்தும் சாப்பிடலாம். வெயிலில் காயவைத்து, பொடித்து வேளைக்கு ஒரு சிட்டிகை ஆவாரம்பூ பொடியை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
ஆவாரம்பூ அல்லது ஆவாரம்பூ பொடியை பாலில் சேர்த்து கொதிக்கவைத்தோ, கூட்டு பொரியலாக செய்தோ சாப்பிட்டு வருவதன்மூலம் உடல்சூடு, வெள்ளைப்படுதல், உடல் நாற்றம், உடம்பில் உப்பு பூத்துப்போதல், வறட்சி, களைப்பு போன்றவை விலகும். இதையே நாள்தோறும் பயன்படுத்தி வந்தால், உடம்பு பொன்னிறமாக காட்சியளிக்கும்.
கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு, பச்சைப்பயறு, கோதுமைத்தவிடு, ரோஜா இதழ் ஆகியவற்றுடன் காய வைத்த ஆவாரம்பூவையும் சேர்த்துப் பொடியாக்கி குளியல் பவுடராக பயன்படுத்தி வந்தால், தோல் நோய்கள் விலகுவதோடு முகத்தில் கருமை படர்தல், தேமல், அழுக்குத்தேமல், வியர்வை நாற்றம் போன்றவை விலகி புதுப்பொலிவு கிடைக்கும்.
நெற்றியிலும், கன்னத்திலும் கருமை படர்ந்திருந்தால், 200 கிராம் ஆவாரம்பூவை அரைத்து சாறு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அதனுடன் 200 கிராம் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் தேமல், சுருக்கம் போன்றவையும் விலகி முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.