நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழ் பிரச்சினையில், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை குறித்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசாங்கம் உணரும் என்று தான் நம்புவதாக மோடி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர், அவருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், இருதரப்பு உறவு தொடர்பாக சனிக்கிழமை முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச 5 நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவுக்கு வந்தாா். பிரதமரான பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கர் ஆகியோரை ஹைதராபாத் இல்லத்தில் இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா-இலங்கை இடையிலான வா்த்தகம், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றன.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,
இந்தியா மற்றும் இலங்கை அண்டை நாடுகள் மட்டுமல்ல, நெருங்கிய நட்பு நாடுகளும் கூட. இதுதரப்புக்கும் இடையே பல கருத்துகள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இந்தியா, இலங்கைப் பகுதிகளில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு இரு நாடுகளும் தக்க பதிலடி அளித்து வருகிறது. இனிவரும் காலங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயலாற்றும்.
இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதாரத் திட்டங்கள், வர்த்தக மற்றும் மூலதன ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இருநாட்டு மக்களையும் இணைக்கும் விதமாக சுற்றுலா வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
“இலங்கையில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை இந்தியாவின் நலனுக்காகவும், ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலனுக்காகவும் முக்கியமானவை” என்று மோடி தெரிவித்தார்.
இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா ஒரு “நம்பகமான பங்காளியாக” இருந்து வருவதாகவும், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான பயணத்தில் நாட்டிற்கு தொடர்ந்து உதவுவதாகவும் அவர் கூறினார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழ் பிரச்சினையில், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை குறித்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசாங்கம் உணரும் என்று தான் நம்புவதாக மோடி கூறினார்.
மீனவர்கள் பிரச்சினை குறித்து குறிப்பிடுகையில், அதை கையாள்வதில் இரு தரப்பினரும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக மோடி கூறினார்.
முன்னதாக, அவருக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.