“சிறுவர், சிறுமியர்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பாலியல்தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவோ, உறவினர்களாகவோ, அண்டை வீட்டுக்காரர்களாகவோ இருப்பார்கள். தாங்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு அவர்கள் மிகவும் நல்லவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள்.
குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போல பழகி, அந்த குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற முயற்சிப்பார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த விழிப்புடன் இருந்தால்தான் இம்மாதிரியானவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க முடியும்”.
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வு முதலில் பெற்றோரிடம் ஏற்படவேண்டும். அவர்கள் பாலியல்ரீதியான விஷயங்களை விஞ்ஞானபூர்வமாக தெரிந்துவைத்துக்கொண்டு, குழந்தைகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பக்குவமாக பதிலளிக்கவேண்டும். ‘இதை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமா?’ என்ற கோணத்தில் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது.
குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை, பெற்றோர்தான் குளிப்பாட்டுவார்கள். அப்போதே உடல் பாகங்களை பற்றி குழந்தைகளிடம் விளக்கி கூறிவிட வேண்டும். ‘உன்னுடைய உடல் ஆரோக்கியத்திற்காக தவிர, வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் உன் உடல் பாகங்களை தொடுவதோ, பார்ப்பதோ, அவை பற்றி பேசுறதோ சரியானதல்ல’ என்பதையும் உணர்த்திவிட வேண்டும்”
குழந்தைகள் விழிப்புடன் இருக்க ‘தொடுதல்’ முறை பற்றி சொல்லிக்கொடுக்கிறீர்களே, அது பற்றி கூறுங்கள்?
“ பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல், குழப்பமூட்டும் தொடுதல் என மூன்று வகையாக தொடுதலை பிரிக்கலாம். குழந்தையிடம் அன்பு காட்டுவது, ஆதரவு கரம் நீட்டுவது, அக்கறை கொள்வது, உதவி செய்வது போன்ற நோக்கத்தில் வெளிப்படும் தொடுதல், பாதுகாப்பான தொடுதலாக கருதப்படும்.
குழந்தைகளை காயப்படுத்துவது, வருத்தமடைய செய்வது, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்படுவது போன்றவை பாதுகாப்பற்ற தொடுதல். அத்தகைய தொடுதலின்போது குழந்தைக்கு கோபமும், அறுவெறுப்பும் தோன்றும். குழந்தைகளின் மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொடுவது, குழப்பமூட்டும் தொடுதலாகும். இவைகளை பற்றி வெளிப்படையாக பெற்றோர், குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்”
குழந்தைகளை பாலியல் கொடுமை செய்ய நினைப்பவர்களை, அவர்களது நடவடிக்கைகள் மூலம் கண்டறிய முடியுமா?
“முடியும். அடுத்தவர்களின் குழந்தையிடம் ஒருவர் அளவுக்கு மீறி கவனம் செலுத்துகிறார் என்றால், அவரது நடவடிக்கைகளை கண்காணியுங்கள். குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றாலும் இறுக அணைப்பது, தொடுவது, முத்தமிடுவது, கிச்சுகிச்சு மூட்டுவது, எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டே இருப்பது போன்ற செயல்களை செய்பவர்கள் மீதும் கவனம் செலுத்துங்கள்.
அடிக்கடி குழந்தையுடன் தனிமையில் இருக்கவோ, அதிக நேரம் செலவிடவோ விரும்பு கிறவர்கள் மீது எப்போதும் விழிப்புடன் இருங்கள். தன்நேரத்தை தன்னுடைய வயதொத்த நண்பர்களுடன் செலவிடாமல் குழந்தைகளுடன் மட்டுமே செலவிட விரும்புகிறவர்களும் கவனிக்கத்தகுந்தவர்கள்.
காரணமே இல்லாமல் குழந்தைக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் அல்லது பணம் கொடுப்பவர்களும் கவனிக்கப்படவேண்டியவர்கள். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே, பிரச்சினைக்குரிய மனிதர்களை அடையாளங்கண்டு, குழந்தைகளை காப்பாற்ற முடியும்”