திருக்கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை திருத்தலம் தான். நினைத்தாலே முக்தியைத் தரும் ஆலயம் அல்லவா அது… ஜோதி ரூபனாய் ஆதியும், அந்தமும் இல்லாமல் உயர்ந்து நின்ற சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் காண முடியாமல் விஷ்ணும், பிரம்மனும் திணறிப் போயினர்.
அவர்களில் திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக, ஈசன் அருள்புரியும் இடமே சுசீந்திரம். இங்கு இறைவன் மும்மூர்த்திகளின் வடிவமாக தாணுமாலயன் என்ற பெயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர் இணைந்த உருவமே தாணுமாலயன். தன்னுடைய அடியையும், முடியையும் காண முடியாத விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், கார்த்திகை திருநாளில் தன்னை வழிபட்டதால், தனது முடியிலும், அடியிலும் இடமளித்து அருள்புரிந்தார். ஆகையால் அந்த திருக்கார்த்திகை திரு நாளில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வும், நம் சந்ததியினரின் வாழ்வும் ஒளிமயமாகும்.
அத்ரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாதேவிக் காகவும், ஈசன் இங்கு மும்மூர்த்திகளாய் காட்சி தருகிறார். இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் காட்சி யளிக்கின்றன. தாணுமாலய சுவாமி கருவறை கோஷ்டத்தின் பின்புறம், உள்பிரகாரத்தில் மரச் சட்டத்தினால் ஆன 27 நட்சத்திர தீபக் குழிகள் உள்ளன. கார்த்திகை திருநாள் மற்றும் பவுர்ணமி நாட்களில் தூய பசு நெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு, 27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கருவறை கோஷ்டத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் மூடு விநாயகர், துர்க்கை, அமர புஜங்கப் பெருமாள், சங்கரநாராயணர், சண்டேஸ்வரர், நடராஜர் சன்னிதிகள் உள்ளன. இத்தல மூடு விநாயகரையும், சங்கரநாராயணரையும் தொடர்ந்து 8 பவுர்ணமி நாட்கள், 5 அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சுப காரியத் தடைகள் அகலும்.
ஆலயம் 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் முதலில் நந்தீஸ்வரரையும், சிதம்பரேஸ்வரரையும் வழிபடலாம். பின்னர் கிழக்கு பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசன்னிதி எனப்படும் கொன்றையடியில் உள்ள மும்மூர்த்திகளை வழிபட வேண்டும். இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. நீலகண்ட விநாயகரின் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும், நவக்கிரகங்களும் உள்ளன. இந்த வசந்த மண்டபத் தூணில் கால பைரவர் சிற்பம் உள்ளது. இங்கு 8 செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
இத்தலத்தில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. சுசீந்திரம் ஆலயத்திற்குள் பெருமாள் சன்னிதியும் உள்ளது.
இவ்வாலய தெப்பக்குளத்தின் வடகரையில் முன் உதித்த நங்கை என்னும் ஆதிபராசக்தி ஆலயமும், அதனை அடுத்துள்ள திருவாவடுதுறை திருமடத்தில் காலபைரவர் தனி ஆலயமும் உள்ளது. இங்குள்ள முன் உதித்த நங்கை அம்மனும், காலபைரவரும்தான், மும்மூர்த்தி தலமான சுசீந்திரம் திருத்தலத்தின் காவல் தெய்வங்களாவர்.
இந்திரன் வழிபட்ட ஈசன் :
தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வ தில்லை. ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து பொருட்களையும் வைத்து விடுவார்கள். அப்படி இரவு நேர பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர், மறுநாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார். முன்தினம் பெருமாள் ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர், மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு அர்ச்சனை செய்ய வருவார்.
காரணம்.. இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையில் தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம். முன்தினம் வைத்த பொருட்கள், மறுநாள் மாறுதல் அடைந்திருக்குமாம். எனவேதான் இந்த அர்ச்சகர் மாறுதல். ‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்து இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஒரு முறை சாபம் காரணமாக இந்திரனின் உடல் முழுவதும் கோரமாக மாறியது. அந்த சாபத்தில் இருந்து விடுபட, இத்தல இறைவனை இந்திரன் வழிபட்டான். அதன் பயனாக அவனது கோர உடல், முன்பு போலவே அழகாகவும், சுத்தமாகவும் மாறியது. இந்திரனின் உடன் சுத்தமானால் இந்த தலத்திற்கு சுசீந்திரம் என்று பெயர் வந்தது. சுசி என்றால் சுத்தமான என்று பொருள். (சுசி+ இந்திரன்=சுசீந்திரன் என்பது மருவியே சுசீந்திரம் என்றானது)
நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் உள்ளது.